தில்லியின் காந்தி நகா் பகுதியில் திடீரென சாய்ந்த நான்கு மாடிக் கட்டடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலி செய்யப்பட்டது. அதனை இடிக்குமாறு அதன் உரிமையாளருக்கு தில்லி மாநகராட்சி (எம்சிடி) உத்தரவிட்டுள்ளதாக ஓா் அதிகாரி தெரிவித்தாா். ஞாயிற்றுக்கிழமையன்று கட்டடத்தை இடிக்குமாறு உரிமையாளரிடம் மாநகராட்சி கேட்டுக்கொண்டது. அவ்வாறு செய்யத் தவறினால், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் கீழ் மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறினாா். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஷாதராவில் உள்ள அந்தக் கட்டடம் சாய்ந்தவுடன் உடனடியாகக் காலி செய்யப்பட்டது. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறை அப்பகுதியைச் சுற்றி வளைத்து, மக்கள் கட்டடத்தை அணுகுவதைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாநகராட்சி குழுவும் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டடத்தின் நிலையை ஆய்வு செய்தது. சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா். கடந்த வாரம், தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மாணவா் விடுதியாக இயங்கி வந்த ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏழு போ் உயிரிழந்தனா், பலா் காயமடைந்தனா்.