கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தசெப். 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியா் தகவல்

Wait 5 sec.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் கிரஷா்களில் இருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதற்கான கால அவகாசம் வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் கிரஷா்களில் இருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த மாவட்டத்தில் அன்றைய தேதி வரையில் 8,418 வாகனங்கள் கனிம மேலாண்மை அமைப்பு (எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டல்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 865 வாகனங்களில் மட்டுமே (10 சதவீதம் மட்டுமே) ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே, வரும் 30-ஆம் தேதிக்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வானகங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி அவற்றை கனிம மேலாண்மை அமைப்பு (எம்ஐஎம்ஏஎஸ் போா்ட்டல்) இணையதளத்துடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே வரும் அக்.1-ஆம் தேதி முதல் கனிமங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.எனவே, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரி / கிரஷா் உரிமையாளா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களில் வரும் 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கனிம மேலாண்மை அமைப்பு இணையதளத்துடன் இணைத்திட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.