மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகே மேலக்கோபுர வீதியில் அமைந்துள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மதுரையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த திரையரங்கில், கொரோனா காலத்தின்போது திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டு திரையரங்கம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.திரையரங்கம் மூடப்பட்ட பின்னர், அந்த வளாகம் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட டாய்ஸ் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாக திரையரங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கார் பார்க்கிங் ஆகவும் அந்த வளாகம் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று மாலை திடீரென திரையரங்க வளாகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அதிகளவில் புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் பகுதிக்கு வந்திருந்த நிலையில், கோவில் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தகவல் அறிந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திரையரங்கம் தற்போது குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்ததால், அங்கு இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறை விசாரணைக்கு பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்.Massive fire at Central Theatre near Madurai Meenakshi Amman Templeடாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை சேகரிக்க புதிய தொழில்நுட்பம்!