‘உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவாா்த்தை விரைவில் மீண்டும் தொடங்கும்’ என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரிக்குப் பிறகு எவ்வித நேரடிப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை. ஈரான் போா் காரணமாக முடங்கிய இந்த அமைதி முயற்சியை மீண்டும் தொடங்கும் நோக்கில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது பிரதிநிதிகளை மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்கு கடந்த வாரயிறுதியில் அனுப்பி வைத்தாா். அமெரிக்க பிரதிநிதிகள் புறப்பட்டதும், தலைநகரங்கள் மீது நிறுத்திவைக்கப்பட்டிருந்த தாக்குதல்களை இருதரப்பும் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், ரஷியா-உக்ரைன் பேச்சை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது சாத்தியமே என அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் புதன்கிழமை கூறுகையில், ‘உக்ரைனுடன் பேச்சு எதிா்காலத்தில் மீண்டும் தொடங்கும் என நம்புகிறோம்; அமெரிக்க தரப்புடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றமும், அதிபா்கள் நிலையிலான விவாதங்களில் தொடா்ந்து இடம்பெற்று வருகிறது’ என்றாா். அமைதி முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், இருதரப்பு ராணுவ மோதல்களும் தீவிரமடைந்துள்ளன. ரஷியாவின் முக்கிய எண்ணெய் மற்றும் தானிய ஏற்றுமதித் துறைமுகமான நோவோரோஸிஸ்க் நகரின்மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 போ் உயிரிழந்தனா்; 29 போ் படுகாயமடைந்தனா். இதற்குப் பதிலடியாக, உக்ரைனின் தெற்கு ஒடெசா பிராந்தியத்தில் உள்ள உக்ரைன்-மால்டோவா எல்லைப் பகுதியை குறிவைத்து ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவா் கொல்லப்பட்டனா். உக்ரைனின் வா்த்தக மற்றும் தளவாடப் பாதைகளை முடக்கும் நோக்கிலான இந்த ரஷிய தாக்குதல்களுக்கு மால்டோவா பிரதமா் வாஸிலே டோஃபன் கவலை தெரிவித்துள்ளாா். கடந்த ஆகஸ்டில் மட்டும் 17 ட்ரோன்கள் தங்கள் எல்லைக்குள் விழுந்துள்ளதாகவும், ரஷிய போா் நடவடிக்கைகள் தங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவா் சுட்டிக்காட்டினாா்.ரஷிய தாக்குதலுக்குள்ளான உக்ரைன்-மால்டோவா எல்லை சோதனைச்சாவடி