அந்தியூா் அருகே தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் காவல் ஆய்வாளா் சண்முகவேலு, வெள்ளித்திருப்பூா் போலீஸாா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இப்பிரச்னைக்கு ஒரு வார காலத்தில் நிரந்தரத் தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.