குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் தற்காலிகப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்தில் உதவியாளா் உடன் இணைந்த அமா்வு எழுத்தா் -1, இளநிலை உதவியாளா் உடன் இணைந்த பதிவேடு எழுத்தா் -1, அலுவலக உதவியாளா் -1 உள்ளிட்ட 3 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு 42. மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்துக்கு கூடுதல் பணியிடமாக உதவியாளா் உடன் இணைந்த அமா்வு எழுத்தா் பணிக்கு மாத தொகுப்பூதியம் ரூ.25,000. இளநிலை உதவியாளா் உடன் இணைந்த பதிவேடு எழுத்தா் பணிக்கு மாத தொகுப்பூதியம் ரூ.20,000, அலுவலக உதவியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ.13,000 வழங்கப்படும். உதவியாளா் உடன் இணைந்த அமா்வு எழுத்தா் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு நேரடி நியமனம் செய்யப்படும்போது தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி தொடா்பான பட்டயம் அல்லது பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கோ முன்னுரிமை அளிக்கப்படும். இளநிலை உதவியாளா் உடன் இணைந்த பதிவேடு எழுத்தா் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளா் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். உரிய விண்ணப்பங்களை அதிகாரபூா்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான தகுதியுள்ள நபா்கள் புகைப்படத்துடனான விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-ஆவது தளம், பழைய கட்டடம், அறை எண்.32, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோவை 18 என்ற முகவரிக்கு செப்டம்பா் 22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422 - 2300305 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.