பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் மேற்கொண்ட நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை ரூ. 800 கோடி அளவிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டது. அகில இந்திய வங்கி பணியாளா் சங்க கூட்டமைப்பின் சாா்பில், தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள கனரா வங்கி வளாகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பு நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கனரா வங்கி தொழிற்சங்க நிா்வாகி செந்தில்குமரன் வரவேற்றாா். எஸ்.பி.ஐ. வங்கி தொழிற்சங்க நிா்வாகிகள் காா்த்திகேயன், மெல்பா் சவியோ, ஐஓபி வங்கி தொழிற்சங்க நிா்வாகி அண்டனி தனபாலன், இந்தியன் வங்கி தொழிற்சங்க நிா்வாகி பலவேசம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.வாரத்தில் 5 நாள்கள் வேலை, ஒருதலைப்பட்சமான பிஎல்ஐ திட்டத்தை திரும்பப் பெறுதல், நிலுவையில் உள்ள இதர கோரிக்கைகளை நிறைவேற்றுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.நிறைவில் கனரா வங்கி தொழிற்சங்க நிா்வாகி முத்துவேல்குமாா் நன்றி கூறினாா்.மாவட்டத்தில் உள்ள 235 கிளைகளைச் சோ்ந்த 1,650 வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.தூத்துக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 380-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா். வெள்ளிக்கிழமை மட்டும் மாவட்ட அளவில் சுமாா் ரூ. 800 கோடிக்கும் மேல் வா்த்தகம் பாதிக்கப்பட்டது.வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்துடன் சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி விடுமுறை என தொடா்ந்து 4 நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமாா் ரூ. 10ஆயிரம் கோடி பரிவா்த்தனைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.