சென்னை, செப். 11 - காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நெற்பயிரைப் பாதுகாப்பதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்னும் கூடுதலாக தண்ணீர் விடும்படி இம்மாதம் 15ம்தேதி பெங்களூர் செல்லும் பிரதம மந்திரி கர்நாடக மாநில அரசிடம் வற்புறுத்தக் கூடும் என்று இன்று சென்னையில் மத்திய நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.தமிழ்நாட்டில் வறட்சி நிலை, காவிரி பாசனப் பகுதிகளில் நெல் உற்பத்தி பாதிக்கப்படாமலிருக்கத் தேவைப்படும் நீர் ஆகியவை குறித்து தமிழகம் வரும் பிரதமரிடம் கவர்னரும், அவரது ஆலோசகர்கள், தலைமைச் செயலாளர் ஆகிய அதிகாரிகள் நிலைமைகளை எடுத்துச் சொல்வார்கள். கர்நாடக அரசிடம் பேசி மத்திய சர்க்கார் தலையிட்டு தண்ணீர் பெற்றுத் தரும்படி பிரதமரிடம் கோருவார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதை தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டி நமது நிலை, தேவையை பிரதமரிடம் விளக்கி, இடைக்கால உதவியாக பயிரைக் காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் கொடுத்துதவ இயன்றதைச் செய்யும்படி கோருவோம் என்றார். ...கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகள் தில்லி திரும்பினர்புது டில்லி, செப். 11- நேற்று லாகூருக்குக் கடத்திச் செல்லப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் போயிங் விமானத்திலிருந்த, எஞ்சிய பயணிகளும், விமான சிப்பந்திகளும் மீட்கப்பட்டு விட்டனர்.விமானத்தைக் கடத்திய ஆயுதபாணிகளான 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.64 பயணிகளும் பயிற்சியாளர் உட்பட சிப்பந்திகளும், டில்லியிலிருந்து சென்றிருந்த ஒரு உதவி விமானத்தில் இன்று பகல் 12-20 மணிக்கு டில்லி வந்து சேர்ந்தனர்.இப்போது லாகூர் விமான நிலையத்தில் இருக்கும் விமானம் திரும்பிச் செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கிவிட்டது. விமானம் நாளை இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இஞ்சினீயரிங் கண்ணோட்டத்திலும், பந்தோபஸ்து கண்ணோட்டத்திலும் இந்த விமானத்தை சோதித்த பிறகு இது லாகூரிலிருந்து கொண்டு வரப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து மந்திரிராஜ் பகதூர் கூறினார்.விமானத்தை சோதிப்பதற்காக லாகூரிலிருந்து தொழில்நுட்ப ஊழியர் கோஷ்டியொன்று லாகூர் சென்றிருக்கிறது. ...11.9.1976: இந்திய விமானம் லாகூருக்கு கடத்தல்