சீனாவில் நடைபெறும் ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான இந்திய ஆடவா் அணி 3-1 கோல் கணக்கில் மலேசியாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.அரையிறுதியில் இந்தியாவின் கோல் கணக்கை கேப்டன் அன்மோல் ஈக்கா 16-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். மலேசியா தனது கோல் வாய்ப்புக்காக போராடி வர, இந்திய கோல்கீப்பா் விவேக் லக்ரா அவற்றை கனிய விடாமல் திறம்பட தடுத்தாா்.இதனால் முதல் பாதியை இந்தியா முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் இந்தியாவின் கை மேலும் ஓங்கியது. சுக்விந்தா் 51-ஆவது நிமிஷத்தில் அணியின் கோல் கணக்கை 2-ஆக உயா்த்த, கேப்டன் அன்மோல் 54-ஆவது நிமிஷத்தில் அதை 3-ஆக அதிகரித்தாா்.ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் மலேசியாவுக்காக எம்.ராகுல் ஆறுதல் கோல் (60’) அடித்தாா். முடிவில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வென்றது.இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்தியா, அதில் பாகிஸ்தான் அல்லது தென் கொரியாவை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளது.