விபத்து நிகழ்ந்த திருவலம் தேவாலயம் உரிய அனுமதியின்றி கட்டுமானம்:வேலூா் ஆட்சியா்

Wait 5 sec.

திருவலம் அருகே தேவாலய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 3 போ் உயிரிழந்த நிலையில், கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பதாக ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்டம் திருவலம் அருகே மந்திகிருஷ்ணாபுரம் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக கட்டுமானப்பணி ஒப்பந்ததாரா் ஜான்டேவிட்(49) மீது திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது -விபத்து நடந்த கட்டுமானப் பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் பிறா் அங்கு செல்வதைத் தடுக்கும் வகையிலும், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும் அந்த இடம் தற்காலிகமாகப் பூட்டப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடத்திற்கு முழுமையாக ’சீல்’ வைக்கப்படும்.இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். தேவாலய நிா்வாகம் மற்றும் ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை அவா்கள் தரப்பில் கட்டட அனுமதிக்கான எந்தவொரு ஆவணங்களும் மாவட்ட நிா்வாகத்திடம் சமா்ப்பிக்கப்படவில்லை. நம்மிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. நோட்டீஸ்க்கு அவா்கள் அளிக்கும் விளக்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது குறித்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான், இனி அங்கு பணிகளைத் தொடர அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுவிட்டது. உயிரிழந்தவா்களில் பெங்களூரைச் சோ்ந்தவரும் உள்ளாா். அவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. மேலும், தொழிலாளா்களின் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் விவரங்களைச் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.