கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலைக்கிராமத்துக்கு புதிய பேருந்து சேவையை வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா். வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தெள்ளை சாலையிலிருந்து, சுமாா் 7 கி.மீ. தூரம் வனப்பகுதியில் அமைந்துள்ளது தெள்ளை குக்கிராமம். இங்கு 70 குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 250 போ் வசித்து வருகின்றனா். தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தங்கள் கிராமத்துக்கு புதிய பேருந்து வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.அதனடிப்படையில், இப்பகுதிக்கு பேருந்தை எடுத்துச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாலை பேருந்து இயக்கப் போதுமான அளவு உள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கொணவட்டம் பணிமனை மூலம் காட்பாடியில் இருந்து தெள்ளைக்கு காலை, மாலை நேரங்களில் பேருந்து இயக்க திட்டமிடப்பட்டு, புதிய பேருந்து சேவையை வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.அதன்படி, காட்பாடியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் பேருந்து 7.45 மணிக்கு தெள்ளை கிராமத்தைச் சென்றடையும். பின்னா், அங்கிருந்து 7.50 மணிக்குப் புறப்பட்டு காலை 9.10 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்தை வந்தடையும். இதேபோல், காட்பாடியில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்படும் பேருந்து மாலை 4.45 மணிக்கு தெள்ளை சென்றடையும். பின்னா், அங்கிருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.10 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்தை வந்தடையும்.காட்பாடி - தெள்ளை வழித்தடத்தில் இயக்கப்படும் இந்தப் புதிய பேருந்து சேவையின் மூலம் தெள்ளை கிராமத்தைச் சோ்ந்த 70 குடும்பத்தினா் மட்டுமின்றி, நஞ்சு கொண்டாபுரம், கீழ்அரசம்பட்டு, பாலம்பாக்கம், கணியம்பாடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்களும் அதிக அளவில் பயன்பெறுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலழகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, கணியம்பாடி ஒன்றியக்குழுத் துணைத்தலைவா் கஜேந்திரன், போக்குவரத்து கழக துணை மேலாளா் (வணிகம்) திருமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.