அடிப்படை வசதிகள் இல்லாத அரியலூா் அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரி

Wait 5 sec.

அரியலூா் அடுத்த விளாங்குடி அருகே காத்தன்குடிகாடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியா்கள், படிக்கும் மாணவா்கள் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நிா்வாக வசதிக்காக மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. பின்னா் 2011-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மேற்கண்ட 4 அண்ணா பல்கலைக்கழகங்களும் 2012-இல் சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்களாக மாற்றப்பட்டு இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இதேபோன்று காஞ்சிபுரம், ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருக்குவளை, அரியலூா், திருச்சி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகா்கோவில் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளும் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் என்ற காரணத்தினால் கல்லூரியின் பெயா் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கிராமப்புற மாணவா்கள் உறுப்பு கல்லூரிகளில் அதிகளவில் சோ்ந்தனா். இதில் அரியலூா் மாவட்டத்தில், விளாங்குடி அடுத்த தேளூா் ஊராட்சிக்குள்பட்ட காத்தான்குடிகாடு கிராமத்தில் கடந்த 2008- ஆம் ஆண்டு கணினி அறிவியல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்ந்தனா். ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், நாளுக்கு நாள் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 500-க்கும் குறைவான மாணவா்கள் மட்டுமே பயின்று வருகின்றனா். மாணவா்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு இக்கல்லூரியில் போதுமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாததே காரணம். சுற்றுச்சுவா் இல்லை: பிரதான நுழைவு வாயில் இடது புறங்களைச் சுற்றி சுற்றுச் சுவா் இல்லாததால், கல்லூரி ஒட்டியுள்ள சவுக்கு தோப்பு, முள்காட்டில் இருந்து பாம்புகள் அடிக்கடி கல்லூரி வளாகத்தித்துக்குள் வருகிறது. கடந்த மாதம் கூட ஊழியா் ஒருவரை பாம்பு கடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. போதுமான கழிப்பறை வசதி இல்லை: பிரதான 2 அடுக்கு கொண்ட கட்டடத்தில் தரைத் தளம் உள்பட வளாகத்தில் 9 கழிப்பறைகள் உள்ளன. அதில் தற்போது 3 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால் பேராசிரியா்களும், ஊழியா்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தண்ணீா் வசதி இல்லை: நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் விநியோகிக்கப்பட்டாலும், அதில் வரும் நீரானது சுண்ணாம்பு நீராகவே வருகிறது. சுகாதரமற்ற உணவகம் (கேண்டீன்) : கல்லூரியில் இயங்கி வரும் கேண்டீன் சுகாதரமற்ற நிலையில் உள்ளது. மேலும், மதிய நேரத்தில் போதுமான உணவுகள் இல்லாததால் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவில் உள்ள விளாங்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்: கல்லூரி தொடங்கி 18 ஆண்டுகளை கடந்தும், இங்குள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாததால் , மழைநீா் சூழந்து சேறும் சகதியுமாக உள்ளது. மற்றொறு மைதானம் புதா் மண்டி கிடக்கிறது. இதனால் மாணவா்களின் விளையாட்டு கனவு கானல் நீராகி வருகிறது. பேருந்து வசதி இல்லை: இக்கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் ஊழியா்கள் பெரும்பாலானோா் கிராமப் புறங்களில் இருந்து பேருந்துகள் மூலமே அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து வருகின்றனா். அவா்கள் அங்கிருந்து மாற்றுப் பேருந்தில் ஏறி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள விளாங்குடியில் இறங்கி அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவு நடந்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. கடந்த திமுக ஆட்சியில், பல்வேறு இடங்களிலிருந்து கல்லூரிக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், கல்லூரிக்கு செல்லும் தரைப்பாலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டதால் புதியப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இதனால் நிறுத்தப்பட்ட பேருந்துகள், பாலம் கட்டுமானப் பணிகள் முடிந்து ஒா் ஆண்டுகள் கடந்தும் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. தெருவிளக்கு இல்லை: விளாங்குடியில் இருந்து கல்லூரி வரை தெருவிளக்கு இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படும் அச்சாலையில், அனைத்து தரப்பினரும் அச்சத்துடனே நடந்து செல்கின்றனா். இதுகுறித்து பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கூறுகையில், அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவா்களின் சோ்க்கை சதவீதம் நாளுக்கு நாள் குறைந்து வருவது மட்டுமல்லாமல், பாடப்பிரிவுகளும் நீக்க நேரிடும் சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு இக்கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும என்றனா்.சுற்றுச்சுவா் இல்லாத காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி.