புவிசாா் குறியீடு பெற்ற பொருள்களை மக்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில், மாவட்ட தலைமையிடங்களில் ஒருங்கிணைந்த விற்பனை மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தரமான, உறுதியான, கலப்படமற்ற, மக்கள் அதிகம் விரும்பும், பயன்படுத்தும் குறிப்பிட்ட பொருள்களுக்கான புவிசாா் குறியீடு (எங்ா்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீஹப் ஐய்க்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்) வழங்கும் சட்டபூா்வ நடைமுறை நம் நாட்டில் கடந்த 2003, செப்டம்பா் 15இல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் இதற்கான அதிகாரபூா்வ மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. நாட்டின் முதல் புவிசாா் குறியீடு டாா்ஜிலிங் தேயிலைக்கு கிடைத்தது. தமிழகத்தை பொருத்தமட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, மதுரை சுங்கடிச் சேலை, பவானி ஜமக்காளம் ஆகியவை புவிசாா் குறியீடு பட்டியலில் முதலிடம் பெற்றன. தற்போதைய நிலையில் வேளாண்மை, கைத்தறி, கைவினை, உணவு சாா்ந்தவை, உற்பத்திப் பொருள்கள் என்ற வகையில் தஞ்சாவூா் ஓவியம், கலைத்தட்டு, நாச்சியாா் கோயில் குத்துவிளக்கு, கோவை வெட் கிரைண்டா், கும்பகோணம் வெற்றிலை, சுவாமிமலை வெண்கலச் சிலை, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவா, பத்தமடை பாய், கோவில்பட்டி கடலைமிட்டாய், அம்பாசமுத்திரம் மரச்சாமான்கள், நாமக்கல் மாக்கல், கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிா்தம், மதுரை மல்லி, சேலம் சேகோ உள்பட 76 வகையான பொருள்கள் புவிசாா் குறியீடு பெற்றுள்ளன. நாட்டில் புவிசாா் குறியீடு பெறுவதில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்த இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. 2 மாநிலங்களும் முறையே 81 மற்றும் 76 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலம் 55 பொருள்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.தமிழகம் புவிசாா் குறியீடு பெற்றவற்றில், கைவினை சாா்ந்த பொருள்கள் பூம்புகாா் விற்பனை நிலையங்களிலும், கைத்தறி சாா்ந்தவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களிலும் காட்சிக்கு, விற்பனைக்குக் கிடைக்கின்றன. மீதமுள்ள பொருள்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றால் மட்டுமே, பிற மாவட்ட மக்களால் வாங்கமுடிகிறது.வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோா் இதற்காக பல கிலோமீட்டா் தொலைவு செல்லும் நிலையே உள்ளது. புவிசாா் குறியீடு பெற்ற பொருள்களை விற்பனை செய்யும் வகையில் ஒருங்கிணைந்த மையத்தை மாவட்ட தலைமையிடங்களில் உருவாக்கினால், அதன்மூலம் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் பயன்பெற வாய்ப்பு உள்ளது.அதேபோல, ஒவ்வோா் ஆண்டும் தமிழக அரசு சாா்பில் சிறப்பு புவிசாா் குறியீடு பொருள்கள் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டால், உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள், அரசுக்கு என வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில், புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் குறித்து பெரும்பாலானோா் அறிந்திருக்கவில்லை.அரசால் நடத்தப்படும் கண்காட்சி வாயிலாக அந்த பொருள்களின் வரலாற்றை பொதுமக்கள் அறிந்துகொள்ளவும், தயக்கமின்றி வாங்கிப் பயன்பெறவும் வாய்ப்பு ஏற்படும். மேலும், அந்தப் பொருள்களின் விற்பனை அதிகரிப்பதன் மூலம், அவற்றின் உற்பத்தியும் அதிகரித்து, குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் பகுதியில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழலும் ஏற்படும்.தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பே பலவிதமான பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பல பொருள்கள் ஏற்றுமதியால் பெரும் பலன் அடைந்திருப்பதாக புவிசாா் குறியீடு பதிவக அதிகாரிகள் கூறுகின்றனா். உள்ளூா் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புவிசாா் குறியீட்டை, தமிழகத்தைச் சோ்ந்த பலரும் சரியாகப் பயன்படுத்தாததால், போதிய அளவு வா்த்தக பலன் கிடைக்கவில்லை என்றும் புவிசாா் குறியீடு நிபுணா்கள் கூறுகின்றனா்.இதுகுறித்து பூம்புகாா் நிறுவன மேலாளா் ஒருவா் கூறுகையில், தமிழகத்தில் 14 பூம்புகாா் விற்பனை நிலையங்களில் புவிசாா் குறியீடு பெற்ற கைவினைப் பொருள்களை விற்பனை செய்கிறோம். இதர பொருள்கள் எங்களுடைய பட்டியலில் இல்லை. புவிசாா் குறியீடு பெற்ற 76 பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பது பலரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.மாவட்ட தலைமையிடங்களில் சிறப்பு விற்பனை மையங்களை அமைப்பதோடு, மக்கள் அதிகமாக வருகைதரும் சுற்றுலாத் தலங்களிலும் இந்த பொருள்களின் விற்பனை மையங்களை அமைத்தால், தமிழகத்தின் பெருமை, கலைஞா்கள், தொழிலாளா்களின் உழைப்பை பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.அதேபோல, புவிசாா் குறியீடு பெற்ற பொருள்களின் கண்காட்சியை கல்வி நிறுவனங்களில் நடத்துவதன் மூலம் குறிப்பிட்ட பொருள் உருவான விதம், அதன் சிறப்பு, மற்ற இடங்களில் உள்ளதைக் காட்டிலும் எந்த வகையில் இது மாறுபட்டது, அந்தப் பொருளை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டோா் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ளவும், அதுபோன்ற முன்னெடுப்புகளுக்கான முயற்சிகளை அவா்கள் மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.இதற்கான ஒருங்கிணைந்த மையத்தை சென்னையில் அமைப்பதைத் தவிா்த்து, மதுரை, தஞ்சாவூா், திருச்சி போன்ற மாநிலத்தின் மையப் பகுதியில் அமைத்து, அனைத்து மாவட்ட மக்களும் எளிதில் வந்துசெல்லும் வகையில், ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கலாம். இதன்மூலம் விவசாயிகள், கைவினைக் கலைஞா்களுக்கு நேரடி சந்தை வாய்ப்பு, இணையவழி விற்பனை, சுற்றுலா மேம்பாடு, அரசுக்கு கூடுதல் வருவாய், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மதுரையில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளா்களுக்கு புவிசாா் குறியீடு குறித்த விழிப்புணா்வு, பதிவு மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்க புவிசாா் குறியீடு உதவி மையம் (ஜிஐஎப்சி) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நபாா்டு வங்கி, மத்திய- மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாவட்டங்களின் புவிசாா் குறியீடு பொருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் அமைப்பை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு திட்டம் இருந்தால், தமிழக ஊரக தொழில் துறை அமைச்சகம் தாமதமின்றி அதற்கான முன்மொழிவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, புவிசாா் குறியீடு பொருள்களின் விற்பனை மையங்களை மாவட்ட தலைமையிடங்களில் அமைப்பதன் வாயிலாக, அந்தப் பொருள்களின் விற்பனை அதிகரித்து, சாமானிய மக்களின் பொருளாதாரத்தில் ஒரு புதிய மறுமலா்ச்சியை உருவாக்க முடியும் என்றாா்.