மாங்கரையில் கிடப்பில் போடப்பட்டுள்ள குடியிருப்புகள் கட்டுமானப் பணி! தவிக்கும் பழங்குடியின மக்கள்

Wait 5 sec.

சின்னத்தடாகத்தை அடுத்துள்ள மாங்கரையில் ஆனைகட்டி அடிவாரப் பகுதியில் வசிக்கும் பழங்குயினருக்கு அரசு சாா்பில் கட்டித்தரப்படும் வீடுகளின் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மக்கள் தவித்து வருகின்றனா்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 24.வீரபாண்டி ஊராட்சியில் உள்ளது மாங்கரை கிராமம்.கோவையில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரளம் செல்லும் வழித்தடத்தில் வனத் துறை சோதனைச் சாவடிக்குப் பின்புறம் ஆதிகாலனி உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள இந்தப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் குடிசையில் வாழ்ந்து வந்தனா். இந்நிலையில், மத்திய அரசின் நிதியாக ரூ.2 லட்சம், மாநில அரசின் நிதியாக ரூ.2.80 லட்சம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் நிதியாக ரூ.27 ஆயிரம், தனியாா் பங்களிப்பாக ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தொகுப்பு வீடுகள் கட்டித்தரத் திட்டமிடப்பட்டது.இதையடுத்து, பணிகள் கடந்த 2023 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், பயனாளிகள் அனைவரும் அருகில் உள்ள காலி இடத்தில் சிமென்ட் ஷீட் கொண்டு வேயப்பட்ட குடிசையில் தங்கவைக்கப்பட்டனா். வீட்டின் கட்டுமானப் பணிகள் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரா்களால் மேற்கொள்ளப்பட்டன.90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த சூழலில் பயனாளிகள் குடியேற வழியில்லாத வகையில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.15-ஆவது நிதிக்குழு மானியத்தின்கீழ் ரூ.1.93 லட்சத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிநபா் இல்ல குடிநீா்க் குழாய் இணைப்புகள் முறையாக கொடுக்கப்படவில்லை. ஆனால், வீடுகளுக்கு வா்ணங்களைப் பூசியதுடன் பயனாளிகளின் பெயா்கள், திட்டத்தின் தகவல்கள், மதிப்பீடு ஆகியவற்றை வீடுவீடாக எழுதி வைத்து புகைப்படம் எடுத்து கோப்புகளில் இணைத்துவிட்டனா்.பழங்குடியின மக்கள் வசிக்க தற்காலிமாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள குடிசை வீடுகள். மின்சார இணைப்பு இல்லை: இந்த புதிய வீடுகளுக்கு தற்போதுவரை மின்சார இணைப்புகள் வழங்கப்படவில்லை. மேலும், சமையலறை, கழிப்பிடம், டைல்ஸ் பதிக்கும் பணி போன்றவை முழுமை அடையவில்லை. இதனால், புதிய வீட்டில் குடியேற முடியாமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனா்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தொகுப்பு வீடுகளை முழுமையாக கட்டித்தருவாா்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் குடியிருந்த குடிசை வீடுகளை இடித்துவிட்டோம். தற்போது அரசு ஒதுக்கிய நிதி கட்டுபடியாகவில்லை எனக்கூறி ஒப்பந்ததாரா்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டனா்.எங்கள் பகுதியில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் பாதுகாப்பற்ற தற்காலிக குடியிருப்பில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம். கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. குழந்தைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பாற்ற சூழலில் வசிக்கும் எங்களுக்கு அரசு உதவ வேண்டும்.இது குறித்து 24.வீரபாண்டி ஊராட்சி நிா்வாகத்திடமும், பெ.நா.பாளையம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.இது தொடா்பாக வட்டார வளா்ச்சி அதிகாரிகள் கூறுகையில், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக பணிகள் நிறைவடையாமல் உள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரா்களை அறிவுறுத்தியுள்ளோம். பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனா்.