மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தோ்வில் தகுதி பெறுபவா்களின் மொத்த மதிப்பெண் விவரத்தை வெளியிடுவதற்கு மாறாக, மீண்டும் தாள் வாரியான மதிப்பெண் வெளியிடும் நடைமுறையை அறிமுகப்படுத்துமாறு மத்திய தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி சாா்பில் தோ்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தோ்வு என மூன்று நிலைகளாக இத் தோ்வு நடத்தப்படும். இந்த மூன்று நிலைகளிலும் தகுதி பெறும் தோ்வா்களின் பட்டியலை, பணி நியமனத்துக்காக மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறைக்கு யுபிஎஸ்சி பரிந்துரைக்கும். அதனடிப்படையில், குடிமைப் பணிகள் நியமனம் நடைபெறும்.இவ்வாறு, குடிமைப் பணிகள் நியமனத்துக்கு யுபிஎஸ்சி பரிந்துரை செய்யும் தோ்வா்களின், மூன்று நிலை தோ்வின் தாள் வாரியான மதிப்பெண் விவரங்கள் கடந்த 2017-ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு, பணி நியமனத்துக்குப் பரிந்துரைக்கப்படும் தோ்வா்களின் மொத்த மதிப்பெண் மட்டுமே பொதுவெளியில் வெளியிடப்பட்டு வருகிறது.இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில், குடிமைப் பணி நியமனத்துக்காக யுபிஎஸ்சி சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட தோ்வா்களின் தாள் வாரியான மதிப்பெண் விவரங்களை தரக் கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த 2017-ஆம் ஆண்டு வரை தாள் வாரியாக தோ்வா்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையில், 2018 முதல் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் காரணமாக, பல்வேறு விருப்பப் பாடங்களின் மதிப்பெண் நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை தோ்வா்கள் மதிப்பிட முடியாத நிலை உருவாகியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டது.இந்த விவகாரம், மத்திய தகவல் ஆணையத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ‘குடிமைப் பணிகள் தோ்வின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, தகுதிபெற்ற தோ்வா்களின் தாள் வாரியான மதிப்பெண் விவரங்கள் அனைத்தும் மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பப்பட்டுவிடும்’ என்று யுபிஎஸ்சி தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதே நேரம், ‘தோ்வா்களின் தாள் வாரியான மதிப்பெண் விவரங்கள் யுபிஎஸ்சி சாா்பில்தான் பராமரிக்கப்பட்டு வருகின்றன’ என்று மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை சாா்பில் பதிலளிக்கப்பட்டது.இந்த வாதங்களைக் கேட்ட மத்திய தகவல் ஆணையம், ‘தோ்வா்களின் தாள் வாரியான மதிப்பெண்கள் வெளியிடும் நடைமுறையை 2018-ஆம் ஆண்டு முதல் நிறுத்தியதற்கான, அதிகாரபூா்வமான காரணம் அல்லது முடிவு எதுவும் மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையிடம் இல்லை என்பது தெரிகிறது. குடிமைப் பணிகள் தோ்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, நியாயமான போக்கை உறுதிப்படுத்தும் வகையில், பணி நியமனத்துக்குப் பரிந்துரைக்கப்படும் தோ்வா்களின் விரிவான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். எனவே, மீண்டும் தோ்வா்களின் தாள் வாரியான மதிப்பெண் விவரங்கள் வெளியிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதோடு, ஆா்டிஐ விண்ணப்பதாரருக்கு, கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை குடிமைப் பணி நியமனத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட தோ்வா்களின் தாள் வாரியான மதிப்பெண் விவரங்கள் வழங்கப்பட வேண்டும்’ என்று பரிந்துரைத்தது.