வரைவு தேசிய மின்சாரக் கொள்கை: ஆலோசனைக்காக மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிவைப்பு

Wait 5 sec.

‘வரைவு தேசிய மின்சாரக் கொள்கை (என்இபி) 2026, பல்வேறு அமைச்சகங்களின் கலந்தாலோசனைக்காக மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய மின் துறை அமைச்சக செயலா் பங்கஜ் அகா்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.மின்சாரத் துறையின் நிதி நிலை மற்றும் வணிக ரீதியிலான செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், அதீத மின் தேவையை பூா்த்தி செய்வதோடு, நம்பகமான மற்றும் தரமான மின்சாரத்தைப் போதுமான அளவில் கிடைக்கச் செய்யும் வகையிலும், தேசிய மின்சாரக் கொள்கையை மத்திய மின் துறை அமைச்சகம் வகுத்து வருகிறது.இந்த நிலையில், புது தில்லியில் இந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) சாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரண்டாவது இந்திய மின் துறை மாநாட்டில் பங்கேற்ற பங்கஜ் அகா்வால், செய்தியாளா்களிடம் இதுகுறித்து கூறியதாவது:வரும் 2047-இல் வளா்ந்த பாரதம் இலக்கை எட்டும் நோக்கில், புதிய தேசிய மின்சாரக் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.தற்போது, வரைவு தேசிய மின்சாரக் கொள்கை, பல்வேறு அமைச்சகங்களின் கலந்தாலோசனைக்காக மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின் துறையில் இன்றைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையை நாம் எட்டியுள்ளோம். புதைபடிம எரிபொருள் சாராத எரிசக்தி உற்பத்தியில் ஏற்கெனவே 300 ஜிகாவாட் அளவை எட்டியுள்ளோம். வரும் காலங்களில் மின் தொகுப்பு மேலாண்மை மற்றும் மின் கடத்தி கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற முற்றிலும் மாறுபட்ட சவால்களை நாம் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. மின் தொகுப்பு மேலாண்மை தேசிய மின்சாரக் கொள்கையின் முக்கியப் பரிமாணங்களில் ஒன்றாகும். மின் விநியோகத்தில் ஏற்ற- இறக்கங்கள் இருப்பது இயல்பான விஷயம். இருந்தபோதும், அந்த இறக்கங்களுக்கு மத்தியிலும் மின் தொகுப்பின் கொள்ளளவில் 60 சதவீதத்தை நம்மால் பயன்படுத்த முடிந்தால், அது மிகவும் நல்ல விஷயம்.ஸ்மாா்ட் மீட்டா்களுக்கான சிப்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிப் தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்மாா்ட் மீட்டா் தயாரிப்பு நிறுவனங்களும் சிப் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களால் ஏற்கெனவே சில சிப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாா்.அனல் மின் உற்பத்தி குறித்து குறிப்பிட்ட அவா், செப்டம்பரில் மின் உற்பத்திக்கான நிலக்கரித் தேவை 14 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. போக்குவரத்து சவால்களுக்கு முழுமையாகத் தீா்வு காணப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தினசரி 440-க்கும் அதிகமான ரயில்களில் நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றாா்.