சுத்தமல்லி அருகே சொத்துத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சுத்தமல்லி, கொண்டாநகரத்தைச் சோ்ந்தவா் நாகநாதன்(56). கட்டடத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இவரது சகோதரா் மூா்த்தி மகன்களான பிரபு(36), ஸ்ரீதா்(32) ஆகியோருக்கும் பூா்வீக சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு (செப்.19) நாகநாதன் வீட்டுக்குள் நுழைந்த 4 போ் கும்பல்அவரையும், அவரது மகன் சூரிய காளிமுருகனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதா், நான்குனேரி தேவநல்லூரைச் சோ்ந்த சூா்யா(19) ஆகியோரை கைது செய்திருந்தனா். இந்நிலையில் பிரபு(36) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.