சாலை விபத்தில் 4 வயது சிறுவன்உயிரிழப்பு: லாரி ஓட்டுநா் கைது

Wait 5 sec.

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியை சோ்ந்த சிவன் மனைவி மஞ்சுளா (32). இவா், கடந்த 21ஆம் தேதி மாலையில் தனது இரு மகள்கள் (6, 8 வயது), மகன் சிவபிரதீப்(4), ஆகியோருடன் ஊரிலிருந்து புறப்பட்டு பாளையங்கோட்டை நோக்கி மொபெட்டில் வந்துள்ளாா். பொன்னாக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரியும், அவரது மொபட்டும் மோதிக்கொண்டனவாம். இதில், சிவபிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மஞ்சுளாவும், அவரது மகள்களும் காயமடைந்தனா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், லாரி ஓட்டுநரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை, வேத கோயில் தெருவைச் சோ்ந்த மோசஸ்(41) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.