முனைவர் அ.ஜ. ஹாஜா முகைதீன்சிங்கப்பூர் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை அதிகம் சார்ந்துள்ள ஒரு சிறிய நாடு. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைக் காட்டிலும் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தின் மதிப்பு மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ளது. மேலும், செலவிடப்படும் ஒவ்வொரு சிங்கப்பூர் டாலரிலும் சுமார் 40 சென்ட் இறக்குமதியாகும் பொருள்களுக்காக செலவிடப்படுகிறது.உலகச் சந்தையில் பெட்ரோலியம், இயந்திரங்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயரும்போது இறக்குமதியை அதிகமாக நம்பியுள்ள சிங்கப்பூர் அவற்றை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்து சிங்கப்பூர் மக்களின் வாங்கும் திறன் பாதிப்பதுடன் இறக்குமதி செய்யப்படும் கச்சா பொருள்கள், எரிபொருள், இயந்திரங்களின் விலை உயர்வதால் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் உற்பத்திச் செலவும் அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாக உள்நாட்டு விலை உயர்வதுடன் மட்டுமல்லாமல் ஏற்றுமதியாகும் பொருள்களின் விலையும் உயர்ந்து உலகச் சந்தையில் சிங்கப்பூரின் போட்டித் திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு வெளிநாடுகளில் பொருள்களின் விலை உயர்வதன்மூலம் உள்நாட்டில் உருவாகும் பணவீக்கம், இறக்குமதி பணவீக்கம் எனப்படுகிறது.அமெரிக்கா - ஈரான் போர் பதற்றங்களால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் எரிபொருள், போக்குவரத்து, உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையும் உயரக்கூடும். இதனால், சிங்கப்பூர் டாலரின் நாணய மாற்று விகிதம் குறைவதற்கான அழுத்தம் ஏற்படலாம்; மேலும், இறக்குமதி பணவீக்கமும் அதிகரிக்கக் கூடும்.ஆகவே, உலக அளவில் பொருள்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை வழியாக சிங்கப்பூரின் உள்நாட்டு பணவீக்கத்துக்கும் காரணமாக அமைவதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகங்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் நாணய மாற்று விகிதத்தை பணவியல் கொள்கையின் கருவியாகக் கொண்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம்.இந்த ஆணையம் தனது நாணய மாற்று விகிதக் கொள்கையை சிங்கப்பூர் டாலரின் பெயரளவு பயனுள்ள மாற்று விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்துகிறது. தனது வர்த்தக கூட்டாளி நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக சிங்கப்பூர் டாலரின் மதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஒருங்கிணைத்து அளக்கும் ஒரு குறியீடுதான் பெயரளவு பயனுள்ள மாற்று விகிதம். இதைக் கணக்கிட ஒவ்வொரு நாட்டுடனும் சிங்கப்பூர் மேற்கொள்ளும் வர்த்தக முக்கியத்துவத்தின் அடிப்படையில், அந்தந்த நாட்டின் நாணயங்களுக்கு முக்கியத்துவம் (வெயிட்டேஜ்) கொடுக்கப்படும்.வர்த்தக முக்கியத்துவம் அதிகமானதாக இருந்தால் அந்த நாட்டின் நாணயத்துக்கு அதிக வெயிட்டேஜ் வழங்கப்படும். இவ்வாறு பல்வேறு நாடுகளின் நாணயங்களுக்கு வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மற்றும் அவற்றுக்கு எதிராக சிங்கப்பூர் டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒருங்கிணைத்து, அந்த நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக சிங்கப்பூர் டாலர் ஒட்டுமொத்தமாக வலுப்பெற்றுள்ளதா அல்லது பலவீனம் அடைந்துள்ளதா என்பதை அறிய முடியும்.ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பெயரளவு பயனுள்ள மாற்று விகிதத்தின் அடிப்படை மதிப்பு 100 என நிர்ணயிக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் டாலரின் பெயரளவு பயனுள்ள மாற்று விகிதம் 100-க்கும் அதிகமாக உயர்ந்தால் வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக சிங்கப்பூர் டாலர் ஒட்டுமொத்தமாக வலுப்பெற்றுள்ளது என்று பொருள்; மாறாக, 100-க்கும் கீழ் குறைந்தால் அதன் மதிப்பு ஒப்பீட்டளவில் பலவீனம் அடைந்துள்ளது என்று பொருளாகும்.பெயரளவு பயனுள்ள நாணய மாற்று மதிப்பு ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை உயரவும் குறையவும் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஒரு கட்டுப்பாட்டு வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் நாணய மாற்று மதிப்பு உயர்வதற்கும் குறைவதற்கும் சந்தையின் சூழ்நிலைகளைப் பொருத்து அனுமதிக்கிறது.நாணயச் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போதோ அல்லது சந்தையின் செயல்பாடுகளால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இடையூறுகள் ஏற்படும்போதோ அந்நியச் செலாவணி சந்தையில் ஆணையம் தலையிடும். தற்போது கணிக்கப்பட்டுள்ள பணவீக்க அழுத்தத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூர் டாலர் சிறிதளவு வலுப்பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.இதைச் செயல்படுத்த ஆணையம் தேவையான சூழ்நிலைகளில் அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலர் உள்ளிட்ட அந்நிய நாணயங்களை விற்பனை செய்து சிங்கப்பூர் டாலரை வாங்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக, சிங்கப்பூர் டாலருக்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பு உயர்வதற்கான அழுத்தம் உருவாகும். ஓர் அமெரிக்க டாலரை வாங்க குறைவான சிங்கப்பூர் டாலரே தேவைப்படும்.டாலர்களை வாங்குதால் வங்கிகளுக்கு ஏற்படும் டாலர் பற்றாக்குறை மற்றும் வட்டி மீதான அழுத்தத்தை சமாளிக்க பணச் சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் தயங்குவதில்லை. சிங்கப்பூர் டாலர் வலுப்பெறும்போது, இறக்குமதி பொருள்களின் விலை சிங்கப்பூர் டாலர் மதிப்பில் குறையும். வெளிநாட்டு நாணயங்களில் விலையிடப்பட்ட பொருள்களை வாங்குவதற்குத் குறைவான சிங்கப்பூர் டாலர்களே தேவைப்படும்.இதன் மூலம் இறக்குமதி வழியாக உள்நாட்டுக்குள் பரவும் பணவீக்க அழுத்தம் குறைக்கப்படுகிறது. எனவே, இறக்குமதி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வலுவான சிங்கப்பூர் டாலர் ஒரு முக்கியமான கருவியாகச் செயல்படுகிறது.சிங்கப்பூரின் தனித்துவமான பணவீக்கக் கட்டுப்பாட்டுக் கொள்கை இறக்குமதியைச் சார்ந்துள்ள வளரும் நாடுகள் பின்பற்றலாம்.