ஹிந்துத்துவம் யாருக்கும் எதிரானதல்ல: குடியரசு துணைத் தலைவர்

Wait 5 sec.

அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் ஹிந்துத்துவம்; அது யாருக்கும் எதிரானது அல்ல என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஹிந்துத்துவம் குறித்த நூல் வெளியீட்டு விழா புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:ஹிந்துத்துவம் யாருக்கும் எதிரானது அல்ல. நாம் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறோம். ஆனால், ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்க வேண்டும். அந்த உரிமை காக்கப்பட வேண்டும்.மற்றவர்களின் உரிமைகளில் குறுக்கிடும் அளவுக்கு நாம் இருக்கக் கூடாது. அது ஹிந்துத்துவம் அல்ல. அது தர்மமும் அல்ல.பல்வேறு சரித்திர மற்றும் அறிவுசார் கண்ணோட்டங்களில் ஹிந்துத்துவத்துக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அரசியல் சிந்தனையாளர்கள், அறிஞர்கள், அமைப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் ஹிந்துத்துவத்தை பல்வேறு வகையாக விளக்குகின்றனர். அதன் வரலாற்று வளர்ச்சி, தத்துவம் சார்ந்த பரிமாணங்கள், பல்வேறு விளக்கங்கள் ஆகியவை குறித்து ஆராய வேண்டியுள்ளது.ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) நான் நீண்ட காலமாகத் தொடர்பு கொண்டுள்ளேன். ஹிந்துத்துவம் என்ற உன்னதமான சிந்தனையின் அடிப்படையில் நமது உயரிய கலாசாரத்துக்குப் புத்துயிரூட்டுவதற்காக அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்தக் கண்ணாடி வழியாகவே ஹிந்துத்துவத்துக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையிலான பந்தத்தை ஹெட்கேவார் (ஆர்எஸ்எஸ் நிறுவனர்) புரிந்து கொண்டார். சரித்திரம், சிந்தனைகள் குறித்து புரிந்துகொள்ள அந்த அமைப்பின் நூற்றாண்டு விழா வாய்ப்பளிக்கிறது.நாம் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். அடிப்படை மதிப்பீடுகள், கலாசார வாழ்வுக்கான லட்சியங்கள், தூய்மையான மனித உறவுகள், அனைவருக்குமான நலன் ஆகியவற்றை கலாசார ஹிந்துத்துவம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாம் மற்றவர்களுக்கு எதிரானவர்கள் என்பதே ஹிந்துத்துவத்தின் அர்த்தம் என்று நாம் எப்போதும் நினைக்கிறோம்; ஆனால், உண்மை அதுவல்ல என்றார் அவர்.