கேரளத்தின் கொச்சி-தமிழகத்தின் தூத்துக்குடியை இணைக்கும் வகையிலான புதிய இயற்கை எரிவாயு குழாய் திட்டத்துக்கு ரூ.2,448.70 கோடி முதலீடு செய்ய, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.கொச்சியிலிருந்து, கன்னியாகுமரி வழியாக தூத்துக்குடி வரை 424.65 கி.மீ. நீளத்துக்கு புதிய இயற்கை எரிவாயு குழாய் திட்டம் (கேடிபிஎல்) அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தைக் கட்டமைத்து, இயக்குவதற்கு ரூ.2,448.70 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.இந்த எரிவாயு குழாய் கட்டமைப்பு, நாளொன்றுக்கு 68.4 லட்சம் மெட்ரிக் தரநிலை கன மீட்டா் (எம்எம்எஸ்சிஎம்டி) எரிவாயுவைக் கொண்டு செல்லும் திறன் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.விதிகளுக்கு உள்பட்டு, இதில் குறைந்தபட்சம் 17.1 லட்சம் மெட்ரிக் தரநிலை கனமீட்டா் அளவுக்கான திறன் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும். இதன்மூலம், இந்த எரிவாயு குழாய் கட்டமைப்பை மூன்றாம் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவா்.