ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும். பரணிகா இளங்கோவன் அவர்கள் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.‘போல் வால்ட்’-ல் வெண்கலம்... தமிழகத்தின் பரணிகா இளங்கோவன் வரலாற்றுச் சாதனை!