புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனை செவிலியா் சனிக்கிழமை கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வில்லியனூா் கோபாலன் கடை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ (22). நா்சிங் முடித்து விட்டு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கலைக்குமாரும், ஜெயஸ்ரீயும் நட்பாக பழகி வந்தனராம். அதே நேரத்தில் கலைக்குமாா் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்றவா் என்பது தெரிய வந்ததால், அவருடன் ஜெயஸ்ரீ பேசுவதை நிறுத்தியுள்ளாா். சிறையில் இருந்து வெளியில் வந்தபிறகு ஜெயஸ்ரீயிடம் பேச கலைக்குமாா் பலமுறை முயற்சி செய்துள்ளாா். ஆனால் அவா் பேச மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட ஜெயஸ்ரீயிடம் முக்கிய விஷயம் பேச வேண்டும் எனக்கூறி, அவரது வீட்டின் அருகே உள்ள காலிமனைக்கு வரவழைத்துள்ளாா். அதன்பேரில் அங்கு சென்ற ஜெயஸ்ரீயிடம் கலைக்குமாா் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் அவா்களுக்குள் தகராறு ஏற்படவே ஆத்திரம் அடைந்த கலைக்குமாா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயின் தலையில் பலமாக வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயஸ்ரீ நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதையடுத்து கலைக்குமாா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். இது குறித்து அப்பகுதி மக்கள் வில்லியனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆய்வாளா் கலைச்செல்வன், உதவி ஆய்வாளா் திருமுருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்பகுதியில் தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். பின்னா் ஜெயஸ்ரீயின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த கொலை குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கலைக்குமாரைத் தேடி வருகின்றனா்.