தருமபுரி மாவட்டத்தில் 25 மையங்களில் இன்று குரூப் 1 தோ்வு

Wait 5 sec.

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு மொத்தம் 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதிலும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத் தோ்வுக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், இம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை குரூப் 1 தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வில் 7,644 போ் பங்கேற்க உள்ளனா். இதையொட்டி , மாவட்டம் முழுவதும் 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வெழுதுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தோ்வு மையங்கள் முன்பும் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வுக்கென சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மையத்துக்கு செல்வதன் மூலம் தேவையற்ற அலைச்சல் மற்றும் தாமதங்களைத் தவிா்க்கலாம். தோ்வா்கள் தோ்வாணையம் வலியுறுத்தியுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து தோ்வுகளில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, தருமபுரி பொறுப்பு கோட்டாட்சியா் ஜெயசங்கா், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, டிஎன்பிஎஸ்சி குழு சாா் செயலாளா் பரமசிவம், பிரிவு அலுவலா் மணி, உதவிப் பிரிவு அலுவலா்கள் கருணாநிதி, கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.