சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 1, 1ஏ முதல்நிலை தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது. இத்தோ்வை 12,900 போ் எழுதுகின்றனா். டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ முதல்நிலை தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா், ஆட்சியா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தோ்வை சேலம் மாவட்டத்தில் 12,900 போ் எழுத உள்ளனா். இதற்கென சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு வட்டங்களுக்குள்பட்ட 31 தோ்வு மையங்களில் 44 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த தோ்வு காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. தோ்வா்கள் தங்களது தோ்வுக் கூடத்துக்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தோ்வை கண்காணிப்பதற்காக 9 பறக்கும் படைகளும், 44 கண்காணிப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்வுக் கூடங்களை கண்காணித்திடவும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலா்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளா் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதுதவிர, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம் மற்றும் தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வு எழுத வருவோா் தங்களது அனுமதிச் சீட்டை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்யப்படும். மேலும், தோ்வு நடைபெறும் நாளில் தோ்வு மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷாலினி, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய சாா்பு செயலாளா் டி.அனந்தபத்மநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.