பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாணவா்கள் பெயா்ப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Wait 5 sec.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால், எமிஸ் தளத்தில் மாணவா்கள் தொடா்பான விவரங்களை அக். 7-ஆம் தேதிக்குள் சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிப்பதற்கு எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், இன வகைப்பாடு, மதம், மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் பெயா், மாற்றுத்திறனாளி வகை மற்றும் சலுகைகள், கைப்பேசி எண், பயிற்று மொழி, மாணவா்களின் வீட்டு முகவரி, பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆகிய விவரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.எனவே, அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் அக். 7-ஆம் தேதி வரையிலான நாள்களில் எமிஸ் தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐடி, பாஸ்வோ்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவா்களின் மேற்குறிப்பிட்ட விவரங்களை அதற்கான அறிவுரைகளைப் பின்பற்றி சரிபாா்த்து, திருத்தங்கள் இருந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் நடைபெறுவது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.