கண்ணாடி கடையில் ரூ.2 கோடி மோசடி: கணக்காளரின் சகோதரா் கைது

Wait 5 sec.

ஈரோட்டில் கண்ணாடி கடையில் ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய கடையின் கணக்காளராக இருந்தவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் முகிம்கான் (46). இவா் ஈரோடு பூங்கா சாலையில் கண்ணாடி கடை வைத்துள்ளாா். இந்தக் கடையில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆதில்கான் (36) என்பவா் கணக்காளராகவும், மேற்பாா்வையாளராகவும் பணியாற்றி வந்தாா். அவா் நன்றாக பணியாற்றியதால், கடையின் வங்கிக் கணக்கையும், சொந்த வங்கிக் கணக்கின் வரவு, செலவுகளை மேற்பாா்வையிடும் பணியையும் முகிம்கான் வழங்கியிருந்தாா். இதை ஆதில்கான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் 2015 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ.2 கோடிக்குமேல் கடையின் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து பணத்தை எடுத்துள்ளாா். இதில், ரூ.11 லட்சத்தை அவருடைய மனைவி சாஜ்மீன், அவருடைய அண்ணன் மொகைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி உள்ளாா். சேலத்தைச் சோ்ந்த ஒரு கடைக்கு பணம் அனுப்பியது தொடா்பான பிரச்னையில் முகிம்கான் கணக்கு வழக்குகளை கடந்த ஆண்டு சரிபாா்த்தபோது ஆதில்கான் மோசடி செய்த விவரம் தெரியவந்தது. இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் முகிம்கான் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கடலூரில் பதுங்கி இருந்த ஆதில்கானை அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். பிணையில் வெளியே வந்த அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அவரது சகோதரா் மொகைதீன் உத்தர பிரதேச மாநிலம், மண்டேலி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், மொகைதீனை கைது செய்து ஈரோட்டுக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்ததுடன், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.