'கற்பனைக் களஞ்சியம்' சிவப்பிரகாசர்

Wait 5 sec.

தெய்வப் புலவர் என்ற அடைமொழி வள்ளுவருக்கும் சேக்கிழாருக்கும் உண்டு. என்றாலும், அந்த அரிய அடைமொழிச் சாயல் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்பனைக் களஞ்சியமாம் நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகளுக்கும் உண்டு என்பதை திருவாமாத்தூர் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் தாம் பாடிய மயிலாசலக் கலம்பகத்தில்தெய்வப் புலமைச் சிவப்பிர காசக் குருவைச்சைவத் தலைமைத் தமிழ்க்கடலை என்பதாகப் பாடிய புகழ்ந்துரையில் நிறுவியுள்ளார்கள்.கற்பனையில்லாமல் செய்யுள் நூல்களும் இல்லை. ஆனால், இலக்கணக் கருத்துகளைத் தம் பல்வேறு அரிய கற்பனைத் திறத்தை தமது 32 நூல்களிலும் வாரி இறைத்துள்ள பெருமை சிவப்பிரகாசர் ஒருவருக்கே உண்டு என்பதால் அவர் கற்பனைக் களஞ்சியம் எனப்பட்டார்.சைவ சமயக் கருத்துப்படி கடவுளை 'மாதொரு பாகன்' என்பது பொது வழக்கு. இந்தப் பொது வழக்கைத் தமிழுக்கே உரிய அகப்பொருள் இலக்கணச் சூழலில் சிறப்பு நிலைப்படுத்தித் திருக்குறளை உவமையாக்கிக் கூறியதென்பது எப்புலவரிடத்தும் காணாத கற்பனைப் புதுமையாகும்.குறட்பா என்பது இரண்டடியாலானது. முதலடி நாற்சீராய், இரண்டாமடி முச்சீராய் நெட்டையும் குட்டையுமாக அமைந்ததை மாதொருபாகனாம் அர்த்தநாரி வடிவத்துக்கு உவமைப்படுத்தியது தோத்திர சாத்திர நூல்களில் காணாதது.மாதொருபாகன் திருவடிபோன்றது குறட்பா எனக் கூறாமல் குறளடி போன்றது இறைவன் திருவடி என்றதே புரட்சியாம். குறளடி உவமை; திருவடி உவமேயம்.இறை திருவடிக்கு திருக்குறள் யாப்பு வடிவம் உவமையாகக் கூறப்பட்டதால் குறளின் சிறப்பு மேலானது எனத் தெரிகிறது. அதாவது, திருவடி தரும் பேற்றைக் குறள் தரும் என்பதாகக் கூறியதே புரட்சியாம் எனலாம்.இந்தக் கருத்தைப் பாடியவர் சிவனையே வழிபடு கடவுளாகக் கொள்ளும் வீரசைவ வேந்தராம் சிவப்பிரகாசர் பாடினார் என்றால் அது பெரும்புரட்சியன்றோ!கல்வி கரையிலாக் காஞ்சியம் பதியின் மண்ணின் மைந்தரான சிவப்பிரகாசர் தொடக்க நாளில் பரமனையன்றி மக்களாம் நரனைப் பாடா விரதம் பூண்டிருந்தவர். காலப்போக்கில் தம் தங்கை ஞானாம்பிகையின் கணவர் சாந்தலிங்கரால் மனம் மாறி மயிலம் பொம்மபுர ஆதீன சிவஞானியாம் சந்நிதானத்தைக் குருவாக ஏற்றுப் போற்றிய வகையில், தம் குரு மீது குருதுதியாகச் சிவஞான பாலய தேசிகர் நெஞ்சு விடு தூது, பிள்ளைத்தமிழ், கலம்பகம், தாலாட்டு, பள்ளியெழுச்சிப் பாடினார்.இவ்வைந்து நூல்களிலும் சிவனே சிவஞானியாக மானுடச் சட்டை தாங்கிக் குருவாக வந்துள்ளதாகப் பாடியதால் சிவஞான பாலயரையே குருவாக வழிபட்டார். இங்ஙனம் சிவஞான பாலய தேசிகரைக் குருவாக வரித்துக் கொண்டு வழிபட்ட சிவப்பிரகாசர் திருவள்ளுவரைக் குருவாகக் கருதிப் பாடினார்.அதாவது, திருக்குறளைச் சிவனது திருவடிக்கு உவமை சொன்னதுபோல், அந்த உவமையைச் சொன்ன திருவள்ளுவரையே தம் குருவாகக் சொன்னார் என்பதுதான் மரபு மீறலான புதுப் பார்வை எனலாம் என்பதால்தான் வண்ணச் சரபம் தண்ட பாணியார் சிவப்பிரகாசரை தமிழ்க் கடல் என்றது முற்றிலும் தகும் எனலாம்.ஈண்டு சிவப்பிரகாசர் வள்ளுவரையும் சிவஞான பாலயரையும் குருவாகக் கூறியதால் மாறுபாடு போல் தெரியினும் வேறு பாடில்லா ஒற்றுமை உடையதாகக் கருதலாம்; வள்ளுவரை ஞாலக் குருவாகவும் சிவஞானியை ஞான குருவாகவுமாகக் கருதி வழிபட்டார் என்பதாக உணர வேண்டும்.அவர் முதன்முதலாகப் பாடிய சோண சைல மாலையில்,விரை விடை இவரும் நினைப் பிறவாமைவேண்டுநர் வேண்டுக, மதுரம்பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்குஅணியும்பிறவியே வேண்டுவன் தமியேன் (39)எனத் தமிழ்ப் பிறவியை வேண்டி விரும்பினார் என்றால், சிவப்பிரகாசரைப் போல் தமிழால் பிறவி வேண்டி மக்களை நல்லாற்றுப்படுத்தும் புலவர் வேறொவரும் இல்லை எனலாம்.