சங்க கால பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட பகுதிகளில் ஒன்று நாஞ்சில் நாடு. இதை வள்ளுவ மரபினர் ஆண்டு வந்திருக்கின்றனர்.இது மலைசார்ந்த இடமாக இருந்தாலும் நெல்லும் கரும்பும் விளையும் மருத நிலமாகவே அதை ஆண்ட குறுநில மன்னர்கள் மாற்றி அமைத்து செழிப்புடன் இருக்கச் செய்திருக்கின்றனர்.நாஞ்சில் பொருந எனும் மன்னன் பற்றிய குறிப்பு புறநானூறு (137-140, 380), அகநானூறு (42), பதிற்றுப்பத்து (மூன்றாம் பத்து, 25) ஆகிய இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.இம்மன்னனை 'நாஞ்சில் பொருநன்' என்றே குறிப்பிடுகின்றனர் (நாஞ்சில்- ஏர் உழும் கலப்பை).இரங்கு முரசின், இனம்சால் யானை,நீ வாழியர்! நின் தந்தைதாய் வாழியர், நிற்பயந்தி சினோரே! (புறம். 137)எனும் பொறையனார் பாடல் கவனிக்கத்தக்கது. வலிமைமிக்க பேரரசுகளான மூவேந்தரில் ஒருவரைக்கூட நான் இதுவரை சந்தித்தது இல்லை. அதாவது, பொருள்வேண்டி இறந்தது இல்லை. ஏனென்றால், எல்லேரிடமும் செல்வதற்கு முன்பே முதன்முதலில் உன்னைச் சந்தித்துவிட்டேன். நீ எமக்கு வேண்டும் பொருள் அனைத்தையும் நல்கி விட்டாய். எனவே, நீயும் என் தந்தை, தாயும் வாழ்க என்றும் நாஞ்சில் நாட்டு வளத்தையும் பதிவுசெய்துள்ளார்.மதுரை மருதன் இளநாகனார் புறநானூறு 138, 139 ஆகிய இரண்டு பாடல்களைப் பாடியிருக்கின்றார். பாடாண் திணை, பாணாற்றுப்படை எனும் நிலையில் பாடியிருக்கின்றார். எம் இளைஞர்களுக்கு உதவுக என்றும் அவர்கள் என்றும் உன் படை வீரர்களாக இருப்பர் என்றும் (138) எம் விறலியர் வறுமையால் துன்புறுகின்றனர் என்பதற்காகப் பொய் சொல்ல மாட்டேன். உன் கொடைத் தன்மையை இந்நாடே அறியும் (139) என்று புகழ்கின்றார்.அகநானூற்றில் (42) களவுத்திணைசார் பாடல் ஒன்றில் நம் மன்னன்நாட்டு சிதைவைப் பாடுகின்றார் கபிலர்.நாடு வறண்டு கிடக்கிறது. நாஞ்சில் நாட்டில் உழும் கலப்பை உறங்குகிறது. கோடைக்காலம் நீண்டு கொண்டே இருக்கிறது. நிலத்தில் பசுமைப் புல் பூண்டுகளே இல்லை. மலைப் பகுதியும் பாறாங்கற்கள் குன்று போல் காணப்படுகின்றன என்று பதிவு செய்துள்ளார்.பதிற்றுப்பத்து மூன்றாம் பத்து பாடிய பாலை கெளதமனார், பல்யானை செல்கெழுக்குட்டுவனின் வீரம் பற்றி பாடும் போது, நாஞ்சில் நாட்டு மீது சேரன் படையெடுத்துச் சென்று இனி அங்கு உழவே செய்ய முடியாத அளவுக்கு அழித்து ஒழித்தான் என்கிறார். அந்நாட்டினை நாஞ்சில் என்று சொல்லமுடியாத அளவிற்று அழித்திருக்கின்றான். இதையே கபிலரும் பதிவுசெய்திருக்கிறார்.