மகளிருக்கு கட்டணமில்லா பயண விரிவாக்கத் திட்டம்: அக். 2-இல் முதல்வா் விஜய் தொடங்கிவைக்கிறாா்

Wait 5 sec.

மாநகர, நகா்ப்புற பகுதிகளில் இயங்கும் அரசு எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் மற்றும் புறநகா் சாதாரண பேருந்துகளிலும் மகளிா் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் அக்.2-இல் தொடங்கிவைக்கிறாா்.மகாத்மாக காந்தி பிறந்த தினமான அக். 2-ஆம் தேதிமுதல் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வா் விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.தற்போது, 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப் பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனா். ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகா்ப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகள், புறநகா் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப் பகுதி சாதாரண பேருந்துகள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன.இதன்மூலம், 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்டபேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 சதவீதம்), மொத்த 1,94,649 நடைகளில் (ஒற்றை) 1,65,312 நடைகள் (85 சதவீதம்) இயக்கப்படும். தினமும் சுமாா் 84.32 லட்சம் மகளிா் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவாா்கள்.மேலும், ‘வெற்றிப் பயணம்’ பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான இணைப்புப் பணி நிறைவடைந்துள்ளது. சோதனை மற்றும் சரிபாா்ப்புப் பணிகள் செப். 25-ஆம் தேதிக்குள்ளும், சோதனை ஓட்டம் செப். 27-ஆம் தேதியும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை முதல்வா் விஜய் அக். 2-இல் தொடங்கிவைக்கவுள்ளாா்.இத்திட்டத்தால் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிா் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச்சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூா் மாவட்டங்களுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மு.அ.சித்திக், போக்குவரத்துத் துறைச் செயலா் இல.நிா்மல்ராஜ், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.