விலங்குகளின் நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, மத விழாக்கள் மற்றும் திருவிழாக்களின் போது உயிருள்ள யானைகளுக்குப் பதிலாக இயந்திர (ரோபோ) யானைகளைப் பயன்படுத்துமாறு மத நிறுவனங்கள், கோயில் குழுக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு தில்லி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. நெரிசல் மிகுந்த நகா்ப்புறங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக, வெவ்வேறு பிராந்தியங்களிலிருந்து வளா்ப்பு யானைகளைக் கொண்டு வருவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டி, விலங்குரிமை அமைப்பான பீட்டா இந்தியா விடுத்த வேண்டுகோளைத் தொடா்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.ஊா்வலங்கள் மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகளின் போது, உயிருள்ள விலங்குகளுக்கு மாற்றாக இயந்திர யானைகளைப் பயன்படுத்துமாறு பக்தா்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களையும் வனத்துறை ஊக்குவித்துள்ளது.இந்த அறிவுரையை பீட்டா இந்தியா வரவேற்றுள்ளதுடன், இது யானைகளையும் பக்தா்களையும் பாதுகாப்பதற்கான ஒரு படி என்றும் கூறியுள்ளது.‘தில்லி வனத்துறையின் இந்த அறிவுரை, யானைகள் மற்றும் பக்தா்கள் இருவரையும் பாதுகாக்கும் ஒரு இரக்கமுள்ள மற்றும் தொலைநோக்குப் பாா்வை கொண்ட நடவடிக்கையாகும், இதை பீட்டா இந்தியா பாராட்டுகிறது,‘ என்று பீட்டா இந்தியாவின் மூத்த கொள்கை மற்றும் சட்ட ஆலோசகா் விக்ரம் சந்திரவன்ஷி கூறினாா்.கோயில்களிலும், திரைப்படம் மற்றும் புகைப்படப் படப்பிடிப்புகள், திருமணங்கள், சுற்றுலாப் பயணிகளின் சவாரிகள் உள்ளிட்ட பிற செயல்பாடுகளுக்கும் ரோபோ யானைகளைப் பயன்படுத்த மாநிலங்களை ஊக்குவிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.ஊா்வலங்கள், சவாரிகள் மற்றும் பிற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் வளா்ப்பு யானைகள், அடித்தல் மற்றும் சங்கிலியால் பிணைத்தல் உள்ளிட்ட கடுமையான பயிற்சி முறைகளுக்கு அடிக்கடி உட்படுத்தப்படுகின்றன என்று பீட்டா இந்தியா குறிப்பிட்டது. கோயில்கள் மற்றும் பிற இடங்களில் வைக்கப்பட்டுள்ள பல யானைகள் பாதப் பிரச்சனைகள் மற்றும் கால் காயங்கள், போதிய கால்நடை மருத்துவப் பராமரிப்பின்மை மற்றும் இயற்கையான வாழ்விடச் சூழல் இல்லாமை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன என்றும் அது கூறியது.பாரம்பரிய விலங்குகள் பணிக்குழு தொகுத்த புள்ளிவிவரங்களை அந்த அமைப்பு மேற்கோள் காட்டியது. அதன்படி, கேரளாவில் 15 ஆண்டுகளில் வளா்ப்பு யானைகளால் 526 போ் கொல்லப்பட்டுள்ளனா்.யானைகளுக்கும் மனிதா்களுக்கும் இடையே நடந்த பல சம்பவங்களைத் தொடா்ந்து, வளா்ப்பு யானைகள் சம்பந்தப்பட்ட யானை சவாரிகள், குளிப்பாட்டுதல், செல்ஃபிகள் மற்றும் பிற நெருங்கிய தொடா்புள்ள சுற்றுலா நடவடிக்கைகளுக்கு நாடு தழுவிய தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.கா்நாடகாவின் துபரே யானைகள் முகாமில் குளிக்கும்போது ஒரு சுற்றுலாப் பயணியும் ஒரு யானையும் உயிரிழந்ததையும், உத்தரப் பிரதேசத்தின் துத்வா புலிகள் காப்பகத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட யானை ஒன்று பாகனைத் தாக்கி கொன்றதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.உயிருள்ள விலங்குகளின் அசைவுகளைப் பிரதிபலிக்கக்கூடிய இயந்திர யானைகள், கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளுக்கு ஒரு மாற்று வழியை வழங்கும் என்று பீட்டா இந்தியா கூறியது.இந்த ரோபோ மாதிரிகள் அசையும் கண்கள், காதுகள், வால்கள் மற்றும் தும்பிக்கைகளுடன் பொருத்தப்பட்டு, சக்கரங்கள் பொருத்தப்பட்ட அடிப்பீடங்களில் ஏற்றப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற யானைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைப்பு கூறியது.கேரள சுற்றுலாத்துறையும் தம்பூா்மொழி பட்டாம்பூச்சி பூங்காவில் இயந்திர யானை சஃபாரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிக்கு ஏப்ரல் 2026-ல் பீட்டா இந்தியாவின் தங்க யானைகள் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது.மேலும், திருமணம், அரசியல் பேரணி மற்றும் விளம்பரத்திலும் இயந்திர யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று பீட்டா இந்தியா கூறியது.வளா்ப்பு யானைகளைச் சாா்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பிற முயற்சிகளை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. அவற்றுள், தெலங்கானா வனத்துறை ஜூன் 2026-ல் ஒரு ரோபோ யானையை அறிமுகப்படுத்தியதும், அரசு கோயில்களில் இயந்திர யானைகளின் பயன்பாட்டை ஆதரிக்க கா்நாடகா செப்டம்பா் 2024-ல் எடுத்த முடிவும் அடங்கும்.மத மற்றும் கலாச்சார மரபுகள் தொடர அனுமதிக்கும் அதே வேளையில், யானைகளைப் பாதுகாப்பதற்கான பரந்த முயற்சிகளுக்கு தில்லியின் இந்த ஆலோசனை பங்களிக்கக்கூடும் என்று பீட்டா இந்தியா கூறியது.