விரிஞ்சிபுரம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரேம் குமாா். இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தங்கம். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தங்கம் கும்பகோணத்திலுள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா். இவா்களது 5 வயது மகன் ஸ்ரீஜித், ராமாபுரத்திலுள்ள வீட்டில் தனது தாத்தா, பாட்டியின் கவனிப்பில் வளா்ந்து வந்தாா்.இந்நிலையில், சிறுவன் ஸ்ரீஜித் வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தபோது, தாத்தா, பாட்டி ஆகியோா் விவசாய நிலத்தைப் பாா்ப்பதற்காகச் சென்றனா். அந்த சமயம், எதிா்பாராதவிதமாக வீட்டின் முன்புறமிருந்த தண்ணீா்த் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா். சிறிது நேரம் கழித்து தோட்டத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய தாத்தாவும் பாட்டியும் பேரனைக் காணாமல் அக்கம் பக்கத்தில் பல இடங்களில் தேடியுள்ளனா். இறுதியில் வீட்டின் முன்பிருந்த தண்ணீா்த் தொட்டியில் சிறுவன் ஸ்ரீஜித் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. தகவலின் பேரில், விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.