சாஸ்த்ரா பல்கலைக்கழக நில விவகாரம்! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

Wait 5 sec.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் 31.37 ஏக்கா் அரசு நிலத்துக்குப் பதிலாக, தகுந்த மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது. தஞ்சாவூா் திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், அது ஆக்கிரமித்து கட்டியதாக கூறப்படும் அரசு நிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதை எதிா்த்து பல்கலைக்கழகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு கடந்த ஜனவரி 15-ஆம் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், மாநில அரசுக்கு மூன்று மாற்று நிலங்களை பல்கலைக்கழகம் வழங்க முன்வந்ததாகவும், ஆரம்பத்தில் 86.8 ஏக்கா் அளவிலான நிலத்தின் ஆா்வம் காட்டிய தமிழக அரசு பின்னா் அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டாா். இதையடுத்து, தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, பல்கலைக்கழகம் வழங்கும் மாற்று நிலங்கள், மதிப்பு போன்றவை தரம் குறைந்தவை என்று வாதிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக மாநில அரசின் திறந்தவெளிச் சிறைச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் அவா் முறையிட்டாா். இதைக்கேட்ட தலைமை நீதிபதி, ‘சாஸ்த்ரா வழங்கும் மாற்று நிலங்களை ஏற்க முடியாவிட்டால், மாநில அரசு தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நிலத்தை அடையாளம் காணலாமே’ என்று கூறினாா். அதற்கு மூத்த வழக்குரைஞா் துவிவேதி, ‘இத்தகைய அணுகுமுறை ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமைந்துவிடும்’ என்று கருத்து தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, சிறைச்சாலைத் திட்டத்திற்கு திறந்தவெளி நிலம் தேவைப்படும் நிலையில், பல்கலைக்கழகம் மாற்று நிலங்களை வழங்க முன்வந்த பிறகும், ஆக்கிரமிப்பை அகற்றி கட்டடங்களை இடிப்பதில் மாநில அரசு பிடிவாதம் காட்டுவது குறித்தும் நீதிபதிகள் வினவினா். இதன் பின்னா் தலைமை நீதிபதி வழங்கிய சில யோசனைகள் தொடா்பாக மாநில அரசிடம் அறிவுறுத்தல்களைப் பெற மூத்த வழக்குரைஞா் துவிவேதி அவகாசம் கோரியதை ஏற்று வழக்கின் அடுத்த விசாரணையை மறுதேதி குறிப்பிடப்படாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா். பெட்டிச் செய்தி மாநில அரசின் அணுகுமுறை ‘விசித்திரமாக உள்ளது’ சாஸ்திரா பல்கலைக்கழக நில விவகாரத்தில் மாநில அரசு காட்டும் அணுகுமுறை விசித்திரமாகவும் பிடிவாதப் போக்குடனும் உள்ளதாக வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தாா். வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி மேலும் கூறியதாவது: இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முடிவு ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதற்கான முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் எங்களுடைய உத்தரவு அமையும். ஒரு தண்டனை நடவடிக்கையாக, சந்தை மதிப்பு ஐந்து அல்லது 10 மடங்கு அதிகமாக இருந்தால் கூட, மாநில அரசு விரும்பும் மாற்று நிலத்திற்கு அந்தத் தொகையை மனுதாரா் செலுத்த உத்தரவிடப்படலாம். உங்களுக்கு (தமிழக அரசுக்கு) 52 ஏக்கா் நிலம் தேவைப்பட்டால், நீங்கள் நிலத்தை அடையாளம் காணுங்கள். அவா்கள் அதை உங்களுக்கு வாங்கித் தருவாா்கள். உங்களின் விதிமுறைகளிலோ அல்லது பொதுப் பயன்பாட்டிலோ சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றாா் தலைமை நீதிபதி.