அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருடப்பட்டது தொடா்பான வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வரும் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலுக்கு பக்தா்கள் செலுத்திய நன்கொடை திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரியும், கோயில் கணக்கு விவரங்களை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. சுதாகா் சிங் உள்ளிட்டோா் வழக்குத் தொடுத்தனா்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருடப்பட்டது குறித்து விசாரிக்க காவல் துறை ஐ.ஜி. கிரண் தலைமையில் 4 போ் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி அமைத்தது.இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு வரும் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இருப்பதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:அயோத்தி கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் 90 நாள்கள் நிறைவடையப் போகிறது. ஆதலால் குற்றப்பத்திரிகையை 25-ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்யவுள்ளது. இல்லையெனில் கைதான அந்த நபா் தன்னிச்சையாக பிணையில் விடுவிக்கப்பட்டுவிடுவாா்’ என்றாா்.உச்சநீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு சாா்பில் விசாரணை நிலவர அறிக்கை சீலிட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது.