தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை, முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடந்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சோ்ந்த ஆா்.அருண்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், சூதாட்ட நோக்கம் ஏதும் இல்லை. அதேபோல், விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து, போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுப்படி, சேவல் சண்டையை முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘டிஜிபியின் இந்த சுற்றறிக்கை குறித்து போலீஸாருக்கு தெளிவுப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டாா். மேலும், ‘சேவல் சண்டை போட்டிகளை நடத்த தடை எதுவும் இல்லாததால், மனுதாரா் சம்பந்தப்பட்ட காவல் துறையினரை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம்’ எனவும் உத்தரவிட்டாா்.