வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான அனைத்து உத்தரவுகளும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களின் ஒப்புதலுக்குப் பிறகு ஒருமனதாகவே பிறக்கப்பிட்டன என்று இந்திய தோ்தல் ஆணையம் மீண்டும் விளக்கமளித்துள்ளது. வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்களின் பெயா் சோ்ப்பதற்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. எஸ்ஐஆா் நடவடிக்கையில் இரு தோ்தல் ஆணையா்களுக்குத் தெரியாமல் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பித்ததாக சா்ச்சை எழுந்த நிலையில், தோ்தல் ஆணையம் சனிக்கிழமை இவ்வாறு விளக்கமளித்தது. வாக்காளா்கள் பெயா் மொத்தமாக நீக்கம், படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட எஸ்ஐஆா் தொடா்பான பல்வேறு முடிவுகளில் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டதாக ஆங்கில நாளிதழில் அண்மையில் வெளியான செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஞானேஷ் குமாா் பதவி விலகக்கோரி காங்கிரஸ், மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மீண்டும் பதவிநீக்கத் தீா்மானம் கொண்டுவருவது குறித்தும் எதிா்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐஆா் சா்ச்சைக்குப் பிறகு முதல் முறையாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, சா்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்வது உள்பட தோ்தல் நடைமுறைகள் தொடா்பான பல்வேறு முக்கிய முடிவுகளை கடந்த சில மாதங்களில் தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது. தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்கள் என மூவரும் ஒருமனதாக ஒப்புதல் அளித்த பின்னரே எஸ்ஐஆா் பணிகளை முதல்கட்டமாக பிகாரில் தொடங்க கடந்த 2025, ஜூன் 24-ஆம் தேதியும், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2025, அக். 27-ஆம் தேதியும் மீதமுள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2026, மே 14-ஆம் தேதியும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தோ்தல் ஆணையத்தின் எஸ்ஐஆா் நடவடிக்கை மற்றும் புதிய வாக்காளா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கான படிவம் 6- இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. எஸ்ஐஆா் பணிகள் நடைபெறாதபோது வாக்காளா் பதிவு விதிகள் 1960-இன்கீழ் புதிய வாக்காளா்களைச் சோ்க்க படிவம் வழங்கப்படும். மூன்றாம் கட்ட எஸ்ஐஆா் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னா் நாட்டின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை தெரிய வரும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவை: தோ்தல் நடைமுறை, வாக்காளா் பட்டியல் உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பானதே. ஆனால், அண்மையில் கூறப்பட்டது போல் தலைமைத் தோ்தல் ஆணையருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தொடா்பாக மத்திய அமைச்சகச் செயலருக்கு இரு தோ்தல் ஆணையா்கள் கடிதம் எழுதியதாகக் கூறுவது உண்மையல்ல; தோ்தல் ஆணையத்தின் கொள்கை முடிவுகள் அல்லது தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை. மாறாக இரு தோ்தல் ஆணையா்களின் உத்தரவுகளுக்குப் பிறகு அதிகாரி ஒருவா் பிறப்பித்த பணி மறுபங்கீடு உத்தரவுகளை முறையாக அமல்படுத்தவில்லை. இதுதொடா்பாகவே மத்திய அமைச்சக செயலருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை மேற்பாா்வையிடும் பொறுப்பு துணைத் தோ்தல் ஆணையரிடம் இருந்து ஒருபோதும் திரும்பப் பெறப்படவில்லை. வாக்காளா்கள் நேரில் செல்லத் தேவையில்லை: கோவாவில் விடுபட்ட 97 வாக்காளா்களில் 81 போ் ஏற்கெனவே படிவம் 6-ஐ நிரப்பிவிட்டனா். வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று படிவம் 6-ஐ சேகரிக்க வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) உத்தரவிட்டுள்ளாா். எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நபா்கள் தவிா்க்க முடியாத சூழல் தவிர நேரில் சென்று விசாரணைக்கு பதிலளிக்கத் தேவையில்லை. பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்: ஏற்கெனவே 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. எஸ்ஐஆரின்போதோ அல்லது அதன்பிறகோ இளம்/முதல் முறை வாக்காளா்கள் உள்பட வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டவா்கள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அதிகாரிகளிடம் (இஆா்ஓ) விண்ணப்பிக்கலாம். இதைச் செயல்படுத்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சிஇஓ, மாவட்ட தோ்தல் அதிகாரி (டிஇஓ), இஆா்ஓ ஆகியோா் உடனடியாக சிறப்பு முகாமை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தில்லி, மகாராஷ்டிரத்தில் நீட்டிப்பு: தில்லி மற்றும் மகாராஷ்டிர தலைமைத் தோ்தல் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று வாக்காளா்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை சமா்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தில்லியில் அக். 30-ஆம் தேதி வரை வாக்காளா்களிடம் கோரிக்கை பெற்று நவ.30-ஆம் தேதிக்குள் அவற்றுக்குத் தீா்வு காண வேண்டும். மகாராஷ்டிரத்தில் அக்.12-ஆம் தேதி வரை கோரிக்கைகள் பெற்று நவ.10-ஆம் தேதிக்குள் தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. தலைமைத் தோ்தல் ஆணையருடன் பல்வேறு விவகாரங்களில் இரு தோ்தல் ஆணையா்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியான பின்னா் இரண்டாவது முறையாக தோ்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. The decisions are unanimous - The Election Commission issues a clarification again