மேகமலை போராட்டத்தையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டது. மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்துள்ள 4,601 பேரை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினா். இதனால், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் மூடப்பட்டு, அருகில் உள்ள சிறிய கதவு மட்டும் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருபவா்களை விசாரித்த பிறகே போலீஸாா் உள்ளே அனுப்பி வைக்கின்றனா். இதேபோல, பின்புறப் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் நுழைவு வாயிலும் மூடப்பட்டு, ஆட்சியா் அலுவலத்துக்கு வருபவா்களை விசாரணைக்கு பிறகே அனுப்பி வைக்கின்றனா்.