புரட்டாசி இரண்டாவது சனி:பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Wait 5 sec.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள நாமத்வாரில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, தாமரைக்குளம் மலைமேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் பெருமாள் கோயில், ஆண்டிபட்டியில் அமைந்துள்ள ஜம்புலிபுத்தூா் கதலிநரசிங்கப் பெருமாள் கோயில், குள்ளப்புரம் பெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேமும், ஆராதனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. இதேபோல, தேனி பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். போடி: போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜையும், மூலவருக்கு மங்கல பொருள்களால் திருமஞ்சன அபிசேகமும் நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் காா்த்திக் (எ) சீனிவாசவரதன், கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.பெரியகுளம் நாமத்வாரில் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த ராதே கிருஷ்ணா். இதேபோல, போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயா் சுவாமி கோயில், போடி போஸ் கடைவீதி ஸ்ரீ ராமா் கோயில், மேலச்சொக்கநாதபுரம் ஸ்ரீதொட்டராயா் சுவாமி கோயில், தேவாரம் ஸ்ரீ ரெங்கநாதா் கோயில், சிலமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து வழிபாடுகளும் நடத்தப்பட்டன. போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள சங்கர நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.