ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக குறைந்தது: பரிசல் இயக்க அனுமதி

Wait 5 sec.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழக காவிரிக் கரையோரப் பகுதியான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாக்கரை, ராசி மணல், மொசல் மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. மேலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக குறைந்ததையடுத்து, காவிரி ஆற்றில் கடந்த 13 நாள்களாக பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, வெள்ளிக்கிழமை முதல் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அனுமதி அளித்துள்ளாா். இதையடுத்து மாமரத்துக்கடவு பரிசல் துறை திறக்கப்பட்டு, ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தை தமிழக , கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.