நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வரும் மகனை மீண்டும் அரசு அல்லது தனியார் காப்பகத்தில் ஒப்படைத்து தத்தெடுத்ததை சட்டப்படி ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் பெண்ணுடன் அவர் தத்தெடுத்து வளர்த்து வரும் 14 வயது மகன் இருக்கிறார். தானும் கணவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 6 வயது சிறுவனை தத்தெடுத்து வளர்த்ததாகவும், தற்போது கணவர் இறந்துவிட்ட நிலையில், மகனை சமாளிக்க முடியவில்லை என்று கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், கடந்த 2021-இல் தனது கணவர் காலமானதைத் தொடர்ந்து, தான் தற்போது தனியாக மகனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று அறிவுசார் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், சிறுவனின் முறையற்ற நடத்தை, ஆக்ரோஷமான செயல்பாடுகள், திருடும் பழக்கம் ஆகியவற்றை தன்னால் சமாளிக்க முடியாமல் இருப்பதாகவும் அந்தப் பெண் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அவனது இத்தகைய நடத்தை சிக்கல்கள் காரணமாக அவன் பல பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், மத்திய தத்தெடுப்பு வள அதிகாரிகளும் பதிலளிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்த பிறகு, அந்த தத்தெடுப்பு நடவடிக்கையை சட்டப்படிதான் ரத்து செய்ய முடியும், அதுவும் நீதிமன்றம் தலையிட்டுத்தான் ரத்து செய்ய முடியும் என்பதால், அந்தப் பெண் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.