மறுபரிசீலனை செய்யக் கூடாதா?

Wait 5 sec.

மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்காக பஞ்சாயத்து ராஜுக்கு சட்ட வடிவம் தந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரே கிராமப்புறத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களும், பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் முன்னேற்றம் பெறுவதற்காக புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் 'ஜவாஹர் நவோதயா' பள்ளிக்கூடங்களைக் கொண்டு வந்தார். அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பன்மொழிப் புலவர் பி.வி. நரசிம்ம ராவ், வைராக்கியத்துடன் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார்.ஜவாஹர் நவோதயா திட்டத்தைத் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்கள் இரு கையேந்திப் பெற்றுக் கொண்டன. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இந்திய ஆட்சி மொழிக்கு அந்தத் திட்டம் முதன்மை கொடுப்பதாக இருந்ததால், அதை மறுதலித்தார்.ஆனால், முற்போக்குக் கொள்கையில் தமிழகத்தைப் போலவே உரிமைகளில் கவனமாக இருந்த கேரளம், அதை மடியேந்திப் பெற்று இன்று 14 நவோதயா பள்ளிகளைப் பெற்று இயங்கிவருகிறது. அப்போது ஆந்திரத்தில் முதல்வராக இருந்த என்.டி. ராமா ராவ் 'தமிழகம் மறுத்த பள்ளிகளையும் எங்களுக்குச் தாருங்கள்' என்று மத்திய அமைச்சர் பி.வி. நரசிம்மராவிடம் பெற்றுச் சென்றார்.ஜவாஹர் நவோதயா பள்ளிக்கூடங்கள் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் ரூ. 4,115 கோடியில் வடிவமைக்கப்பட்டன. ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வகுப்புவரையில் படிக்கும் பிள்ளைகளுக்கு உணவு, உடை, புத்தகங்கள் மத்திய அரசால் வழங்கப்படும். கிராமங்களில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்துப் பிள்ளைகளுக்கும், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.அதில் வெற்றி பெற்ற மாணவர்களே ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கிராமத்துப் பிள்ளைகள் பயன்பெறுவதற்காக, அந்தந்த மாநிலத்தின் மொழி மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மூன்றாம் மொழியாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.இன்றைக்கு இந்தியாவில் 661 நவோதயா பள்ளிக்கூடங்கள் 2,87,568 மாணவ, மாணவிகளைக் கொண்டு இயங்கி வருகின்றன. பத்தாம் வகுப்பில் 99.71 சதவீதமும், பிளஸ் 2-வில் 98.93 சதவீதமும் நிகழாண்டில் மாணவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். கடந்தாண்டு 2.41 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதினர். அதில் 47,320 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நாடு முழுவதும் 638 மாவட்டங்களில் சுமார் 661 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய பிரதேசத்தில் 54 பள்ளிகள், ஒடிஸாவில் 31 பள்ளிகள், சண்டீகரில் 59 பள்ளிகள், ஜம்மு -காஷ்மீரில் 12 பள்ளிகள், பஞ்சாபில் 23 பள்ளிகள், ஆந்திரத்தில் 77 பள்ளிகள், கர்நாடகத்தில் 31 பள்ளிகள், உத்தர பிரதேசத்தில் 89 பள்ளிகள், மேற்கு வங்கத்தில் 20 பள்ளிகள், குஜராத்தில் 34 பள்ளிகள், மகாராஷ்டிரத்தில் 34 பள்ளிகள், திரிபுராவில் 8 பள்ளிகள், பிகாரில் 85 பள்ளிகள், தில்லியில் 9 பள்ளிகள் அருணாசல பிரதேசத்தில் 18 பள்ளிகள், அஸ்ஸôமில் 28 பள்ளிகள், ஹரியாணாவில் 21 பள்ளிகள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.வேறு எந்தக் கல்வி நிலையத்துக்கும் இல்லாத சலுகை, நவோதயா பள்ளிகளுக்கு அமைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் 75 சதவீத சலுகை, பட்டியலின மாணவர்களுக்கும், மலைவாழ் வகுப்பின மாணவர்களுக்கும், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உண்டு. இன்னும் மாணவிகளுக்கு 33% சதவீத இடஒதுக்கீடும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.நவோதயா பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அவர்களுடைய ஆராய்ச்சி அறிவை மேம்படுத்துவதற்காகப் பொருட்காட்சிகளும் நிகழ்த்தப் பெறுகின்றன. நிகழ்கால அறிவியல் மற்றும் தொழிலறிவை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சியில் நிமிர்ந்து நிற்கும் ஆய்வுக்கூடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குரிய அறிவு ஞானத்தை வளர்ப்பதற்காக, சூழலியலாளர்களை அழைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன.நவோதயா பள்ளி மாணவர்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்காக ஒரு மாநிலத்து மாணவர்கள் பிற மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகியல் அறிவைப் பெறுவதற்கும் துறை சார்ந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுடைய அறிவை விசாலமாக்குகிறார்கள். ஒவ்வொரு நவோதயா பள்ளியிலும் கணினிக் கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு வைஃபை இணைப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.இந்திய ஒருமைப்பாட்டின் கீழ் வாழும் நாம் பல நேரங்களில் ஆட்சி மொழியை ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும் கேந்திரிய வித்யாலயங்கள் வீறு பெற்று நிற்கின்றன. அங்கு இடம் பெறுவதற்குத் தமிழ்ப் பெற்றோர் ஏங்கித் தவிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயங்களைத் தவிர, மற்ற நம்முடைய தனியார் பள்ளிகள் கேட்கிற தொகையை, வழிப்பறி கொள்ளையர்கள்கூட கேட்க மாட்டார்கள்.பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தரக் குடும்பங்கள் கேந்திரிய வித்யாலயங்களில் இடம்பெற கடவுளைக் கும்பிட்டு நிற்கின்றனர். கேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் பிள்ளைகள் தாய்மொழி அறிவே இல்லாமல் வெளிவருகின்றனர். என்றாலும், அகில இந்திய அளவில் பதவிகளைப் பெற்று, நல்வாழ்வை அடைந்து விடுவதால், அவர்கள் விசனப்படுவதில்லை; கேந்திரிய வித்யாலயங்களை ஒரு மாநில அரசால் தடுக்கவும் முடிவதில்லை.ராணுவப் பயிற்சி நிலையங்கள் இருக்கிற ஒவ்வொரு மாநிலத்திலும் 'சைனிக் பள்ளி' ராணுவத்தாலேயே நடத்தப்படுகிறது. கிரேக்க நாட்டுப் பிளேட்டோ, 'கிரேக்கத்தில் குழந்தைகள் பிறந்தவுடன், உடனே ராணுவம் வந்து, அந்தக் குழந்தையைப் பெற்று சென்றுவிடும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்தக் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். ஏனென்றால், இப்போது கிரேக்கத்துக்குப் போர் வீரர்கள்தாம் தேவை' என்று எழுதி வைத்தார்.பிளேட்டோ சொன்னபடி செய்யாமல், இந்திய நாட்டுக்கு ஒருமைப்பாட்டுணர்வுடைய வீரர்கள் தேவை என்ற நோக்கத்தால் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் ஒரு 'சைனிக் பள்ளி' பல ஆண்டுகளாக ராணுவத்தால் நடத்தப்பட்டு வருகிறது. உண்டி, உடை, உறையுள் அனைத்தும் பள்ளி வளாகத்திலேயே!அங்கு பயின்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. உதகையில் இருக்கிற பப்ளிக் ஸ்கூல்களில் ஆங்கிலக் கல்விமுறைதான் ஆட்சி செய்கிறது. தமிழ்நாட்டில் பிற இடங்களில் இருக்கிற பெற்றோர், பொருளாதாரத்தில் மிதக்கிற பெற்றோர், தங்கள் பிள்ளைகளைச் சிறு வயதிலேயே உதகையிலும், ஏற்காட்டிலும், கொடைக்கானலிலும்தாம் சேர்த்து வருகின்றனர்.குழந்தைகள் வீட்டில் இருப்பது தங்களுக்கு தொல்லை என்று நினைக்கிற பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மேற்படி பள்ளிகளில்தான் சேர்த்து வருகின்றனர். பள்ளி திறக்கும்போது கொண்டுவிட்டு வருவதும், விடுமுறையின் போது அழைத்துவருவதும் வழக்கமாகிவிட்ட பழக்கம்.'தூய அறிவே பிரம்மம்' என்பதே நவோதயா பள்ளியின் குறிக்கோள் மற்றும் இலச்சினை. மத்திய கல்வித் துறை அமைச்சரே பள்ளியின் தலைவர். அவர் நியமித்த வல்லுநர் குழு கல்விக் கூடங்களை நிர்வகிக்கிறது. அவர்களுக்கு உதவியாக கல்வியமைச்சரால் ஒரு நிதிக் குழுவும், மற்றொரு கல்வியாளர் குழுவும் உள்ளன.மாநிலங்களுக்கிடையில் செயல்படும் பள்ளிகளை நிர்வாகம் செய்ய இந்தியா முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடலாம். மணிப்பூர், மத்திய பிரதேசத்தின் ரட்லம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் வாழும் மக்கள் மிக மிகப் பிற்பட்ட மக்கள் என்பதால், அவர்கள் தேவைக்கு அதிகமாகவே நவோதயா பள்ளிகள் நிறுவப்பட்டன.1986-இல் இருந்து 40 ஆண்டுகளாக, மணிமேகலை தந்த அட்சய பாத்திரத்தை இழந்து நிற்கிறோம். 40 ஆண்டுகளாக தரமான கல்வியை - பணச் செலவின்றி வழங்கப்படும் கல்வியை இழந்து நிற்கும் பட்டியலின மக்களுக்காக, பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக மறுபரிசீலனை செய்யக் கூடாதா?இந்தியாவில் தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களிலும் பட்டியலினத்தாரின் முன்னேற்றத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தாரரின் பிள்ளைகளுக்காகவும் திறந்து வைக்கப்பட்டிருக்கிற நவோதயா பள்ளிகளின் கதவுகள், தமிழ்நாட்டில் மட்டும் மூடிக் கிடப்பதை மறுபரிசீலனை செய்யலாமே!'அன்ன யாவினும் புண்ணியங் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'எனும் பாரதியார் சிந்தனையையும்'அவ்வவ் இனத்தின் அவ்வம் மொழிகளைச்செம்மை செய்து செழுமையாக்கிஇனத்து மக்கள் எவர்க்கம் பரப்பும்ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும்என்பது என் எண்ணம்'எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிந்தனையையும் எண்ணிப்பார்த்தல் நாட்டுக்கு நல்லது.