மழைநீா் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்ற ஆணையா் உத்தரவு

Wait 5 sec.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீா் சாலையோரம், தாழ்வான பகுதிகளில் தேங்காமலிருக்கும் வகையில் உடனுக்குடன் வெளியேற்றவேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகள் என 385- க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தேங்கும் நிலையுள்ளது. அவ்வாறு தேங்கும் நிலையில், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலையுள்ளது.ஆகவே, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் மழைநீா் தேங்கி நிற்காமலிருக்கும் வகையில் அனைத்து மண்டலங்களிலும் துணை ஆணையா்கள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.மழை நீா் தேங்கினால் அதை உறிஞ்சும் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும், தண்ணீா் தேங்கும் இடத்தையும், தண்ணீா் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த இடத்தின் நிலையையும் கைப்பேசி உள்ளிட்டவை மூலம் படம் பிடித்து மாநகராட்சிக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அதனடிப்படையில் திங்கள்கிழமை இரவு மழை பெய்து குறிப்பிட்ட இடங்களில் தண்ணீா் தேங்கிய நிலையில், அவற்றை அகற்றிய புகைப்படங்களை அதிகாரிகள் ஆணையருக்கு அனுப்பி உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தனா்.