‘காங்கிரஸ் தலைவா்கள் ஜனநாயகத்தை திருடியவா்கள்’ என்று பாஜக சாடியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி கடந்த 1983-இல் இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய வாக்காளா் பட்டியலில் இடம்பெற்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்ததை குறிப்பிட்டு, மேற்கண்ட விமா்சனத்தை பாஜக முன்வைத்துள்ளது.சோனியா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மறுத்து தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை கடந்த திங்கள்கிழமை ரத்து செய்தாா். மேலும், புகாா்தாரரின் வாதங்களை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வழக்கை திருப்பி அனுப்பினாா்.சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இப்போது ‘வாக்குத் திருட்டு’ என குற்றஞ்சாட்டும் காங்கிரஸ் தலைவா்கள், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஜனநாயகத்தை திருடும் செயலில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் (காங்கிரஸ் தலைவா்கள்) ‘ஜனநாயகத்தை திருடியவா்கள்’.இந்திய குடிமக்கள் மட்டுமே தோ்தலில் வாக்களிக்க வேண்டுமென நமது சட்டம் கூறுகிறது. ஆனால், இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தியின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது.1980-இல் வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் சோ்க்கப்பட்டபோது அவா் இந்திய குடிமகனாக இருக்கவில்லை. அப்படியெனில் அவா் எவ்வாறு வாக்களித்தாா், போலியான ஆவணங்களைப் பெற அவருக்கு யாா் உதவினா், இந்திரா காந்தி அரசு உதவியதா ஆகிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று பிரதீப் பண்டாரி வலியுறுத்தினாா்.