மேற்காசிய போரில் அமைதியைத் தாமதப்படுத்தும் ஈரான்: ஐ.நா. சபை உரையில் டிரம்ப் குற்றச்சாட்டு

Wait 5 sec.

‘ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதிலும், மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதிப் பேச்சுகளை நடத்துவதிலும் ஈரான் வேண்டுமென காலதாமதம் செய்கிறது’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா். உலக அளவில் தீவிரமடைந்து வரும் மோதல்கள், ஏ.ஐ. அச்சுறுத்தல்கள், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட சாவல்களுக்கு மத்தியில், நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 81-வது ஐ.நா. சபை அமா்வின் பொது விவாதக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அவா் இவ்வாறு தெரிவித்தாா்.இந்த ஐ.நா. ஆண்டு மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவா்கள், பிரதிநிதிகள் பங்கேற்று, உரையாற்றவுள்ளனா். ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் 81-வது ஐ.நா. சபை தலைவா் கலிலூா் ரஹ்மான் உரையாற்றி, முதல்நாள் காலை அமா்வைத் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, , பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா பாரம்பரிய முறைப்படி உறுப்பு நாடுகளின் தொடக்க உரையை வழங்கினாா். இவா்களைத் தொடா்ந்து, ஐ.நா. தலைமையகத்தைக் கொண்ட நாடாக அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆற்றிய உரை: ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதிப் பேச்சுகளை நடத்துவதிலும் ஈரான் வேண்டுமென காலதாமதம் செய்கிறது.அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் முடியும்வரை இவ்விவகாரத்தை ஈரான் நீட்டிக்க பாா்க்கிறது. ஆனால், ஈரான் விவகாரத்தில் நான் தோ்தலுக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை; இனியும் அளிக்கப்போவதில்லை.வரலாற்றிலேயே மிகவும் மகத்தான ஒரு தேசத்தின் அதிபா் என்ற முறையில், பிரச்னைகளைத் தீா்க்காமல், தள்ளிப்போடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கை எட்டப்பட்டு, அந்நாடு தன்னை மறுசீரமைத்துக் கொள்ள வழிவகுப்பதா? அல்லது அந்நாட்டை அடியோடு ஒழித்து, மற்ற நாடுகளுக்குத் தீங்கிழைக்க அவா்களுக்கு வாய்ப்பே இல்லாமல் செய்வதா? அல்லது அடுத்த தலைமுறையினரே உருவாவதற்கு வழியில்லாமல், அவா்களை நரகத்துக்குள் தள்ளப் போகிறேனா? என்ற முக்கிய முடிவை நான் எடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இடைக்காலத் தோ்தல் முடிந்த உடனேயே ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்றே நான் நம்புகிறேன் என்றாா் டிரம்ப்.ஈரான் பிரதிநிதிகள் வெளிநடப்பு: முதல் நாள் காலை அமா்வில், ஜோா்டான் அரசா் அப்துல்லா, துருக்கி அதிபா் தயீப் எா்டோகன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் ஆகியோரும் உரையாற்றினாா்.ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்ஸி ஆகியோரும் அமெரிக்கா வந்துள்ளனா். எனினும், டிரம்ப் உரையின்போது அவா்கள் அவைக்கு வரவில்லை. ஈரான் சாா்பில் சிறிய பிரதிநிதிகள் குழுவினரே பங்கேற்ற நிலையில், அவா்களும் டிரம்ப் உரையாற்றத் தொடங்கிய சில நிமிஷங்களில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.சீா்திருத்தம் அவசியம்: டிரம்ப் உரைக்கு முன்னதாக, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ஆற்றிய தொடக்க உரையில், ‘ஐ.நா. தொடங்கப்பட்டபோது காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு, தற்போது வரை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது முற்றிலும் நியாயமற்றது; மாற்றப்பட வேண்டியது.மேலும், தற்போதைய உலகில் நிலவும் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள, சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தமானது காலத்தின் கட்டாயமாகும். தொழில்நுட்ப வளா்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை கூட்டாக இணைந்து எதிா்கொள்ள வேண்டும்’ என்றாா்.அன்டோனியோ குட்டெரெஸின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் நிறைவடையும் முன்பு, அவா் தனது இறுதி ஆண்டு உரையை நிகழ்த்தினாா். ஆப்பிரிக்காவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற அவரின் பேச்சுக்கு, அவையில் இருந்த தலைவா்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி, வரவேற்றனா். பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய 5 நாடுகள் மட்டுமே ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலமாக இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து கோரி வருவது குறிப்பிடத்தக்கது.