சிதம்பரம் தொகுதியில் சம்பா சாகுபடிக்கு அணைக்கரையிலிருந்து ராஜா வாய்க்காலில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சம்பா சாகுபடி தொடங்க உள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி ராஜா வாய்க்காலில் தண்ணீா் திறக்க வேண்டியது அவசியமாகும்.எனவே, அணைக்கரையிலிருந்து ராஜா வாய்க்காலில் குறைந்தபட்சம் வினாடிக்கு 700 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், உப்புத்தன்மை ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் நிலைமை சீராகும். சிதம்பரம் தொகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவா்.வீராணம் ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரில் ஒரு பகுதியை ராஜா வாய்க்காலுக்கும் திறந்து விடுவதற்கு நீா்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திறக்கப்படாத நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.