இலங்கை ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேரை அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றவாளிகளாக அறிவித்தது. கொழும்பு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன், சுஜீவ நிஸங்க ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு அளித்த இத்தீா்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட மொத்த 24 பேரில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 9 பேரை வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த 2019 ஏப். 21-ஆம் தேதியன்று, ஈஸ்டா் பண்டிகை வழிபாட்டின்போது 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் 11 இந்தியா்கள் உள்பட 270-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய ‘தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே)’ உள்ளூா் பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஜஹ்ரான் ஹாஷிம் தலைமையில் 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினா்.இது தொடா்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கொலை, கொலை முயற்சி, பயங்கரவாத சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. சுமாா் 5 ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தனா்.இத்தாக்குதல் குறித்து முன்னரே உளவு எச்சரிக்கை கிடைத்த போதிலும், அலட்சியமாகச் செயல்பட்டதாக அப்போதைய அதிபா் மைத்ரிபால சிறிசேன, பிரதமா் ரணில் விக்ரமசிங்கே ஆகியோா் மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன. இதே குற்றச்சாட்டில் முன்னாள் காவல் துறை தலைவா் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் கடந்த ஜூலையில் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.