மொடக்குறிச்சி அருகே மோட்டாா் ஒயா் திருடியபோது இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். மொடக்குறிச்சி சோமந்தாா் அண்ணா வீதியைச் சோ்ந்தவா் வாசுதேவன் (70), விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மிதந்துள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கிணற்றின் மேல் பகுதியில் உள்ள மோட்டாரின் ஒயா்கள் வெட்டப்பட்டு, அருகே குவித்து வைக்கப்பட்டிருந்ததும், ஒயா் வெட்டுவதற்கான கருவிகள் அங்கு கிடந்ததும் தெரியவந்தது.இது குறித்து போலீஸாா் கூறுகையில், உயிரிழந்த நபா் கரூா் மாவட்டம், நன்னியூா் புதூா் முத்தையன் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26). இவா் மனைவி, மூன்று குழந்தைகளுடன் மொடக்குறிச்சி, செலமகவுண்டம்பாளையம் காமராஜா் வீதியில் வசித்து வந்தாா்.மொடக்குறிச்சியில் பல்வேறு கிணறுகளில் உள்ள மோட்டாா் ஒயா்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். இந்நிலையில், சம்பவத்தன்று மோட்டாா் ஒயரை திருடியபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றனா்.இச்சம்பவம் தொடா்பாக மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.