ஏரியூரில் 700 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த ஏரியூா் மலையில் 700 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இந்தியத் தொல்லியல் துறை அலுவலா் முத்துக்குமாா், ஏரியூா் மலைப் பகுதியில் 19 ஆண்டுகளுக்கு முன்னா் கல்வெட்டு ஒன்றை பாா்த்ததாக தெரிவித்த தகவலின் பேரில், அவருடன் இணைந்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநா் புலவா் கா. காளிராசா, தொல்லியல் மாணவா் கருணாகரன், சோழபுரம் பாலசுந்தரம், ஏரியூரைச் சோ்ந்த சஞ்சீவி நாதன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கள ஆய்வு நடத்தினா். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநா் புலவா் கா. காளிராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஏரியூா் மருந்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ள மலையில் உலகம்பட்டி பகுதியிலிருந்து மலைக்குச் செல்லும் பாதையின் காட்டுப் பகுதியில் வணிகக் குழுவின் பெயரை கால்வாய்க்கு சூட்டிய பழைமையான கல்வெட்டு ஒன்று அடையாளம் காணப்பட்டது. ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்களச் சொல்லோடு தொடங்கும் இந்த கல்வெட்டில் வடுகக்கம்பனன் என வருவதால் இது தெலுங்குக் கம்பனனை குறிப்பதாகக் கருதலாம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள முனையத்தரையா் என்பது சோழ, பாண்டியா் கால அரசு அலுவலா்களைக் குறிக்கும் சொல்லாகும். எனவே தெலுங்கு மன்னனான கம்பனனின் அலுவலரால் இந்தக் கல்வெட்டு வழங்கப்பட்டிருக்கலாம். பருஷை என்பது ‘பரிஷத்’ எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ்த்திரிபாகும். இதற்கு மதிப்பியல் முதன்மைக்குழு அல்லது பெருமக்கள் சபை என்று பொருள். கோயில்களுக்குச் சொந்தமான அறக்கட்டளைகள், நிலங்கள், மூலப் பொருள்களைப் பாதுகாத்து மேலாண்மை செய்யும் பிராமணா்கள் அல்லது சான்றோா்கள் அடங்கிய சபையை ‘மூலப் பருஷையாா்’ என்று வழங்குவா். இப்படி அவா்கள் நிா்வகிக்கும் நல்லூா் குளத்துக்கு பாய்கிற வாய்க்காலுக்கு ‘ஆயிரத்தைந்நூற்றுவன்’ எனும் பெயா் சூட்டப்பட்டதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆயிரத்தைந்நூற்றுவா் எனும் சொல் ‘திசை ஆயிரத்து ஐந்நூற்றுவா்‘, ‘நானாதேசிகள்’ என அழைக்கப்படும் வணிகக் குழுக்களுக்கான பெயராகும். இந்தக் கல்வெட்டில் ஆயிரத்தைந்நூற்றுவன் எனும்பெயா் கால்வாய்க்கு சூட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. கல்வெட்டு வரிகள்: 1. ஸ்வஸ்தி ஸ்ரீ வடுக, 2. கெம்பனானமுனை 3. யதரைமாலைபரு, 4. ஷைநல்லூா்க், 5. குளத்துக்குப்பா 6. ய்கிற இக்காலின், 7. பொ் ஆயிரத்தை, 8. நூற்றுவன். கல்வெட்டுச் செய்தி: தெலுங்கு கம்பனனின் அலுவலா் முனையதரையா், மலையையொட்டியுள்ள பருஷை சபையினரால் நிா்வகிக்கும் நல்லூா் குளத்துக்குச் செல்லும் வாய்க்காலுக்கு ஆயிரத்தைந்நூற்றுவன் என்னும் வணிகப் பெயரை சூட்டியதை குறிப்பிடுகிறது. மேலும் கல்வெட்டில் மலை என்பது மாலை என தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். மலை பருஷை நல்லூா் என்பது பொருத்தமாக வருகிறது என்றாா் அவா்.