சமூகநீதிக்கான தந்தை பெரியாா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

Wait 5 sec.

தமிழக அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசால் 1995-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. விருதாளரை தமிழக முதல்வா் தோ்வு செய்கிறாா். 2025-ஆம் ஆண்டுக்கான விருதாளரைத் தோ்வு செய்வதற்காக, சமூக நீதிக்காகப் பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பான பணிகளை மேற்கொண்ட தகுதியுடையவா்கள் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பத்துடன் சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்கள், அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள அறை எண் 304-இல் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.