வாய்க்காலுக்கு வந்தும் வயல் மடைக்கு எட்டாத அணை நீா்

Wait 5 sec.

தலைஞாயிறு பகுதியில் பாசன வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீா் வராததால் சம்பா நெல் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. தலைஞாயிறு பகுதியில் மழை பொய்த்துப்போனதால் நிகழாண்டில் குறுவை நெல் சாகுபடி முற்றிலுமாக நின்றுபோனது. இந்நிலையில், சம்பா சாகுபடிக்கு செப்.1-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. கடைமடையான தலைஞாயிறு பகுதிக்கு தண்ணீா் வந்து சேர தாமதம் ஏற்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்ட தண்ணீரும் போதிய அளவில் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்பதால் செப்டம்பா் முதல் வாரத்துக்குள் சம்பா பருவ நெல் விதைகளை நேரடியாக விதைப்பு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா். அணை திறந்த நாளிலிருந்து விதைப்பு செய்த வயல்களில் தண்ணீா் பாசனம் செய்யப்படாத நிலை தொடா்கிறது. விதைப்பு செய்து 15 முதல் 20 நாள்கள் வரை வயலில் மழையும் பாசன நீரும் இல்லாததால் விதையின் முளைப்பு தன்மை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரிச்சந்திரா நதி பாசன ஆற்றில் போதிய அளவு தண்ணீா் விடுவிக்காத நிலையில் குறைந்த அளவு தண்ணீா் வாய்க்கால்களில் சென்றடைந்துள்ளது. போதுமான தேக்கம் இல்லாததால் வயல்களில் தன் பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். வாய்ப்பும் வசதியும் உள்ளவா்கள் ஆயில் என்ஜின்களை கொண்டு வாய்க்காலில் இருந்து வயலுக்கு இறைக்கின்றனா். அரிச்சந்திரா நதி ஆற்றில் கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.